சைவசித்தாந்தம் முப்பொருள்களை முன்வைக்கும் மெய்யியலாகும்.
- பிறப்போ இறப்போ இல்லாத, தோற்றமோ முடிவோ இல்லாத, அளவிலா இன்பமும் முடிவிலா அறிவும் கொண்ட இறைவன் ஒருவன் இருக்கிறான்.
- அந்த இறைவனை அறிந்து முன்னேறும் பொறுப்பைக் கொண்ட வரையறை கொண்ட அறிவுடைய கணக்கற்ற உயிர்கள் உள்ளன.
- அந்த உயிர்கள் ஏன் இறைவனை அறிந்து முன்னேற வேண்டும் என்றால், அறியொணாக் காலம் முதல் அறியாமையில் ஆழ்த்தியுள்ள இருள் அல்லது மலம் அதன் அறிவை மறைத்துள்ளது.
இந்த இறைவன், உயிர்கள், மலம் என்பன முப்பொருள். இவை வெவ்வேறானவை, என்றும் உள்ளவை, ஒன்றிலிருந்து ஒன்று தோன்றாதவை என்பது சைவ சித்தாந்தத்தின் முடிவு.
எனில் இந்த உலகம், அதன் படைப்புகள் எல்லாம் எதற்காக என்றால்
4. அளவுக்கு மிஞ்சினால் ஆடையையே பாதித்துவிடும் சலவைப்பொருட்களைப் பயன்படுத்தி ஆடையின் அழுக்கை நீக்குவது போல, உயிர்களின் அறியாமையை நீக்க இந்த உலகமும் படைப்பும் இறைவனால் “மாயை” எனும் இன்னொரு மலத்திலிருந்து உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்கின்றது சித்தாந்தம்.
உலகம் இருப்பதால் உயிர்களுக்கு எவ்வாறு மலம் தீரும் என்றால்,
5. அழுக்குத் துணியை அடித்துத் துவைத்தும் உதறிப்பிழிந்தும் மின்னழுத்தியும் தூய்மையாக்குவது போல, உலகோடும் ஏனைய உயிர்களோடும் நல்லவிதத்திலும் தீயவிதத்திலும் உறவாடி, அதனால் நல்வினை, தீவினையைச் சம்பாதித்து உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து உழல்வதால் ஒருகட்டத்தில் அறியாமை விலகும். இந்த நல்வினையும் தீவினையுமே கர்மா அல்லது கன்மம். அடித்துத் துவைப்பதும் உதறிப்பிழிவதும் மிதமிஞ்சி மின்னழுத்துவதும் எவ்வாறு ஆடைக்கு கேடாக முடியுமோ அப்படி இந்தக் கன்மமும் மலமே.
இப்படி மலங்களை இருள் (ஆணவம்), கன்மம், மாயை எனும் மூன்றாகவும்,
உயிர்களை முத்தி அடைந்தோர், அடைய இருப்போர் என்று இரண்டாகவும்,
இறைவனை சூரியனும் கதிரும் போல சிவம், சக்தி (அல்லது திருவருள்) என்று இரண்டாகவும்,
மேலும் பிரித்துக் கூறும் சித்தாந்தம்.
உயிர்கள் கன்மத்தால் எப்படி அறிவுபெறும் என்றால்,
நல்வினையால் சிலநேரத்தில் துன்பம் விளைவதும் (அன்புக்குரியவரிடம் கிடைத்த இன்பம் அவர் பிரியும் போது துன்பம்) தீவினையால் சிலநேரத்தில் இன்பம் விளைவதும் (இடர்க்கால அனுபவங்கள் பின்னொருநாளில் இனிய நினைவுகள்) நல்லதோ கெட்டதோ எல்லாம் ஒன்றே எனும் நிலைக்குக் கொண்டு செல்லும் (இருவினையொப்பு). அதனால் பக்குவம் அதிகரிக்கும்.
நல்ல குரு ஒருவரை நாடுவதாலும், இறைவனின் திருவருள் பதிவதாலும் உயிர்களுக்கு ஞானம் கிட்டும். எனவே தன்னை மீறிய பேரின்ப – பேரறிவு வடிவான இறைவனை தன்னுள் கண்டுகொண்டு உயிர்கள் தாமும் பேரின்பமும் பேரறிவும் அனுபவிக்கும். அதுவே சைவம் சொல்லும் இறுதிநிலையான வீடுபேறு.
திருவருள் இன்றி வீடுபேறு சாத்தியமில்லை என்பதும்,
மாயை என்பது போலித்தோற்றம் அல்ல; உயிர்களுக்கு நிலைக்களனாக இருக்கும் உண்மையான பொருளே என்பதும்,
வீடுபேற்றிலும் இறைவனும் ஆன்மாக்களும் ஒன்றாவதில்லை, அவை ஒரேநேரத்தில் ஒன்றாகவும் வேறாகவும் உடனாகவும் இருக்கும் என்பதும்,
இந்திய மெய்யியல்களில் மெய்கண்டார் சித்தாந்தத்தின் சிறப்பியல்புகள்.
சைவ சித்தாந்த நூல்கள்.
தமிழ் மெய்கண்டார் சித்தாந்த மெய்யியலுக்கு அடிப்படையானவை பதினான்கு மெய்கண்ட சாத்திர நூல்களாகும். இவற்றின் பல்வேறு மெய்யியல் விவாதங்களின் அடிப்படையிலேயே மெய்கண்ட சித்தாந்தம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
இவற்றில் காலத்தால் திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார் என்பன முற்பட்டவை எனினும், மெய்கண்ட தேவர் அருளிய “சிவஞானபோதம்” எனும் நூலின் பெருமையாலும், அதன் வழிவந்த சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம், உண்மைவிளக்கம் முதலிய நூல்களின் சிறப்பாலும் தமிழ்ச்சித்தாந்தம் மெய்கண்டார் சித்தாந்தம் எனும் புகழ்பெற்றது.
உந்தி, களிற்றுப்படி என்பவற்றை பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வியலூர் உய்யவந்தார், கடவூர் உய்யவந்தார் ஆகிய இருபெரும் சிந்தாந்த அறிஞர்கள் இயற்றினர். 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டார் சிவஞானபோதத்தையும் அதற்கான வார்த்திகம் எனும் உரையையும் அருளினார்.
மெய்கண்டாரின் தலைமைச்சீடரான அருணந்திசிவனார் சிவஞானபோதத்துக்கு வழிநூலான சிவஞானசித்தியார் எனும் புகழ்பெற்ற நூலை அருளினார். அவர் அருளிய இன்னொரு நூல், இருபா இருபஃது.
மெய்கண்டாரின் இன்னொரு சீடரான மனவாசகங்கடந்தார் “உண்மைவிளக்கம்” எனும் நூலை அருளினார்.
ஏனைய எட்டு நூல்களும் உமாபதி சிவனாரால் அருளப்பட்டவை.
தமிழ்ச் சித்தாந்தத்தை மூலநூல்களிலிருந்தே கற்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன. இங்கு மாணவருக்கு எளிமையான கற்கை முறைமையில் நூல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள மாணவர்கள் உரிய சுட்டிகளில் நுழைந்து மின்னூல்களை நிகழ்நிலையில் அல்லது தரவிறக்கிக் கற்கலாம்.
