இலங்கை கண்ட “முதலாவது” சைவம் போற்றுதும் 2018

இலங்கை கண்ட "முதலாவது" சைவம் போற்றுதும்

இலங்கையிற் பண்பாட்டையும் தத்துவத்தையும் கலையுடன் இணைத்து சைவம் வளர்க்கும் நிகழ்வுகள் அரிதென்ற நிதர்சனத்தினை உய்த்துணர்ந்த, இலங்கை சைவநெறிக் கழகத்தார் "சைவம் போற்றுதும்- 2018" என்கின்ற விழாவினை முதன்முதலில் 07ம் நாள் ஏப்பிரல் மாதம் 2018 அன்று, சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அரங்கேற்றினர்.
 இவ்விழாவிற்கு முதன்மை அனுசரணையை வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாளிகையினரும், துணை அனுசரணையை சைவநெறித் தொண்டர் கழகம்-கனடா, சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை -டென்மார்க்,லிட்டில் ஏசியா எம்போரிய ஆடையகத்தினர் வழங்கியிருந்தனர். இவ்விழாவிற்கு குருவருளைப் பொலியும்முகமாக நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன இரண்டாம் குருமகாசந்நிதானம் பெருமானார் சீர்வளர்சீர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் எழுந்தருளினார்கள். முதன்மை விருந்தினராக இந்துசமய கலாசார அமைச்சர் மாண்புமிகு டி.எம்.சுவாமிநாதன் அவர்களும், பீடுடைவிருந்தினராக வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாளிகை அதிபர் திரு.அ.பி.ஜெயராஜா பெருமகனாரும் , மாண்புறு விருந்தினராக கழகத்தின் காப்பாளர் விடைக்கொடிச்செல்வர் திரு.சின்னத்துரை தனபாலா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ்விழா, கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன்(சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர்) தலைமையிற் சிறப்புற நடைபெற்றது. விழாவினை கழகத்தின் பொருளாளரும் ஊடகத்துறையாளருமாகிய திரு.இரா.இராஜ்குமார் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
.

மங்கல விளக்கேற்றலுடனும் ,மரு.செல்வி.திவியா யோகராஜா  அவர்களின் திருமுறை ஓதுதலுடனும், பீடுடைவிருந்தினர் திரு.அ.பி.ஜெயராஜா தம்பதியர் விடைக்கொடி ஏற்றிவைக்க,
திருவாவடுதுறை ஆதீன திருமுறைப் பயிற்சிமைய இசைவாணர் திருமதி.ஹம்சானந்தி தர்மபாலன் அம்மையார் கொடிக்கவி பாடிட விழா இனிதே தொடங்கியது. வரவேற்புரையைத் கழகத்தின் துணைத்தலைவர் செல்வி.செ.உதயகௌரி அவர்கள் ஆற்றினார்கள்.
வரவேற்பு நடனம் செல்வி ஹம்சத்வனி தேவதாஸ் அவர்களால் சிறப்பாக அனைவரும் உவக்குமாறு நிகழ்த்தப்பட்டது.

தலைமையுரையை கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்கள் வழங்கினார்கள். சைவசமயத்தின் பண்பாட்டுச் சால்புகளைத் தாங்கியவாறு இலங்கையில் பண்பாட்டையும் தத்துவத்தையும் இலக்கியத்தினையும் இணைக்கும் விழாக்கள் இன்மையையும், சைவசமயம் புறச்சமயங்களான ஸ்மார்த்தமதம் முதலியனவற்றாலும், ஏனைய புறப்புறத்திற்கும் புறம்பான ஆபிரகாமியச்சமயங்களினாலும் எதிர்கொள்ளும் சாவல்களை எடுத்துவிளக்கி - இலங்கை சைவநெறிக் கழகம் தோன்றுவதற்கு இச்சவால்களை எதிர்கொள்ளும் திறத்துடன் உருப்படியாக எந்தவொரு சைவ அமைப்பும் வினைத்திறனாக செயலாற்றாமையால் விளைந்த இடைவெளியே காரணம் என்பதையும் சுட்டித், தம் தலைமையுரை வழங்கினார்.

சிவபூமிச் சைவமுதலிகள், சிவபூமிச் சைவத்தேசிகர், சிவபூமிச் சைவத்தாதையர் பிரகடனம் தலைமையுரையைத் தொடர்ந்து நடைபெற்றது. இப்பிரகடனத்திற்கு திருவருள் ஆசியை நல்லை ஆதீன இரண்டாம் குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தப் பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார்கள். சிவபூமிச் சைவமுதலிகளாக ஶ்ரீலஶ்ரீ ஞானப்பிரகாசசுவாமிகள்,ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானார், ஶ்ரீலஶ்ரீ காசிவாசி செந்திநாத ஐயர் பெருமானார், ஶ்ரீலஶ்ரீ மாயவாததும்சகோளரி கதிரைவேற்பிள்ளை பெருமானார் ஆகியோரும், சிவபூமிச் சைவத்தேசிகர்களாக சைவப்பெரியார் திருவிளங்கம் தேசிகர் பெருமானார், சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் பெருமானார், சைவப்புலவர் காசிநாத அருணாசல தேசிகமணி பெருமானார், பண்டிதர் மு.கந்தையா பெருமானார் ஆகியோரும் சிவபூமிச் சைவத் தாதையர்களாக கோமான் திரு.பொன்னம்பலம் இராமநாதன் பெருமானாரும், சைவப்பெரியார் கா.சூரன் பெருமானாரும் பிரகடனம் செய்துவைக்கப்பட்டனர். இப்பிரகடனத்தினூடாகச் சைவசமயம் இடம்,சாதி என்ற குறுகிய எல்லைகளைக் கடந்து சிவபூமியான இலங்கைக்கே உரித்தான பண்பாடென்னும் மறுமலர்ச்சியை இலங்கை சைவநெறிக் கழகம் உருவாக்கியுள்ளது எனலாம்.
 
இவ்விழாவிற் நாயன்மார் அரங்கு என்னும் சொற்பொழிவு அரங்கு கழகத் தலைவர் மரு.திரு.கி.பிரதாபன் தலைமையிற், திரு.ஜீ.ஷஜீவன்(யாழ்ப்பாணம்), சிவத்திரு.இராஜ.தர்சக ஐயர், திரு.மெ.சாருஜன், சித்தாந்தரத்தினம் செல்வி.செ.உதயகௌரி ஆகியோர் கலந்து நால்வரைப் பற்றியும் இலக்கியநயத்துடன் சொற்பொழிவுகளை வழங்க, கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்கள் இலக்கியநயத்துடன் கருத்துரைகளை நாயன்மார் பற்றி வழங்கினார்.

கொட்டக்கலை தமிழ் மகாவித்தியாலத்து மாணவரினால் கிராமிய நடனம் அரங்கேற்றப்பட்டது. அம்மாணவரின் ஆக்கத்திறனையும் கிராமிய நடனத்தின் அழகு நயத்தினையும் கொழும்பில் அரங்கேற்றும் வாய்ப்பினை இலங்கை சைவநெறிக் கழகம் இதனூடாக உருவாக்கியிருந்தது அனைவராலும் பாராட்டுக்குரியதாகியது.
திருவாவடுதுறை ஆதீனத்தால் சித்தாந்தச் செம்மணி விருது வழங்கிச் சிறப்புச்செய்யப்பட்ட இலங்கை நாட்டின் சைவப்புலவர் திரு.செல்லையா நவநீதகுமார் அவர்களுக்கு இவ்விழாவில் சிறப்புச்சால்பு வழங்கப்பட்டது.
சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம் என்னும் தலைப்பிற், சித்தாந்தச் செம்மணி அவர்கள் சிறப்புரையும் ஆற்றினார்கள். கழகப் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்களின் "உலகளாவிய சைவம்" என்னும் கருப்பொருளில் கணினி அரங்களிக்கை அனைவராலும் கொண்டாடப்படுமாறு சிறப்புடன் நடந்தேறியது.இந்தகு கணினி அரங்களிக்கை சைவ உலகிற்கு புதிது எனின் வியப்பில்லை.

திரு.விமலநாதன் விமலாதித்தன் அவர்களின் தலைமையிற், திரு.அ.ஹரிசன், திரு.அ.கஜந்தன், திரு.வீ.சிந்துஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிவக்கவியரங்கு நடத்தினர். சிவக்கவியரங்கினைச் சுவைத்த கூட்டத்தார், கவியரங்குகளைக் கண்ட தமிழுலகிற் சிவக்கவியரங்கென்ற "சிவமணம் கமழும் தமிழ்க் கவியரங்கு" அருமையானதொரு புத்தாக்கம் மட்டுமல்ல, சைவசமயத்தின் தத்துவத்தினை இலக்கியத்தோடு இணைக்கும் கந்தபுராணக் கலாச்சாரத்தின் நீட்சியென்று பாராட்டி மகிழ்ந்தனர்.

மட்டக்களப்பு-அம்பாறைத் திருகோவிற் பிரதேசத்தினைச் சேர்ந்த நாட்டுக்கூத்துக் கலைஞர்களால் அருச்சுனன் பாசுபதம் பெறல் நாட்டுக்கூத்து அரங்கேற்றப்பட்டது.
  சைவநெறிச்செல்வர்,சைவமாமணி,சைவசமூகச்செம்மல்,மருத்துவ மாமணி, ஆசிரிய மாமணி விருதுகளுடன், சைவநெறிப் புரவலர் கலாநிதி மு.கதிர்காமநாதன் விருதும் சைவத்தொண்டர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், சான்றோர்க்கு சிறப்புச்சால்பும் வழங்கப்பட்டது.

சைவம் போற்றுதும் என்னும்பெயரில் சைவசமய அடிப்படை விசயங்களையும் சிவபூமிச் சைவமுதலிகள்,சைவத்தேசிகர்,சைவத்தாதையர் வரலாறுகளையும், விருது நாயகர்களின் வரலாற்றுச் சிறுகுறிப்புக்களையும் உள்ளடக்கி நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
 
முதன்மை விருந்தினர்,பீடுடைவிருந்தினர்,மாண்புறு விருந்தினரின் உரைகளும் இடம்பெற்றன. சைவசமயத்து இளைஞர்களுக்கு ஒரு புதுவீரியம் அளிக்கும் விழா இதுவென்ற கருத்தினை விருந்தினர் சுட்டிக்காட்டினர்.
 

கழகப் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்களின் நன்றியுரையுடன் கழகப்பண் இசைக்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.
தலைநகரில் சைவசித்தாந்த தத்துவத்தையும் பண்பாட்டையும் இலக்கியத்தையும் ஒருங்கிணைந்து நடந்த இவ் இலக்கியநய விழாவிற் கலந்துகொண்டோர், இவ்விழா சைவசமயத்திற்கு ஓர் புதியமுயற்சியென்று பாராட்டி மகிழ்ந்தனர்.