சிவஞானமாபாடியம் – வருணத்துவப் பகுதிகள் இடைச்சேர்க்கைகளே!

சிவத்திரு பரணீதரனார் அவர்கள், சிவஞானமாபாடிய கர்த்தராகிய மாதவச்சிவஞானமுனிவர் வருணத்துவம் நீக்காதென்ற கொள்கை உடையவர் என்று சாதித்த சில சாதிவாதச்சைவருக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், தற்காலத்தில் வழக்கில் உள்ள சிவஞானமாபாடியம் குறித்த விளக்கங்களை முகநூலில் 02 – 07 – 2024 ஆம் நாள் எழுதியுள்ளார்.  தற்கால சிவஞானமாபடியப் பதிப்பில் காணப்படும் வருணத்துவம் குறித்த பகுதிகள் இடைச்சேர்க்கையாக உள்ளது குறித்து அருணைவடிவேல் முதலியார் பெருமான் முதலியோர் எடுத்துக்காட்டி விளக்கியவற்றைக் குறிப்பிட்டு, சிவஞானமாபாடியம் அச்சேற்றப்பட்ட வரலாற்றை விளக்கி எழுதியுள்ளார். சிவத்திரு பரணீதரன் பெருமகனார் தமது முகநூலில் எழுதிய பதிவு இங்கே தரப்படுகின்றது.“மாதவச் சிவஞான சுவாமிகள் தீக்கையால் வருணத்துவம் நீங்காது என்று மாபாடியத்தில் எழுதி விட்டார்; ஆகையால் சைவத்தில் வருணத்துவம் உண்டு” என்று பல நாட்களாகப் பலர் சொல்லி வருகிறார்கள். இந்தப் பகுதியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வுசெய்யப் புகும் முன் தற்போது பதிப்பில் உள்ள இந்த மாபாடியம் வெளிவந்த வரலாற்றை அறிந்திருக்க வேண்டும்.

மாபாடியம் எழுதப்பட்டுப் பல வருடங்கள் வெளியார் யாரும் அறியாத வண்ணம் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இடம் திருவாவடுதுறை ஆதீனம். அந்த ஆதீனத்தார் இதுநாள் வரையில் அதை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சபாபதி நாவலர் என்பார் ஆதீனத்தின் அனுமதியின்பேரில் அங்கிருந்த பிரதிகளை வாங்கிச் சென்று படியெடுத்த பிறகு திரும்பவும் ஆதீனத்திடம் ஒப்படைக்கிறார். இலங்கையில் உள்ள வண்ணைநகர்ச் சுவாமிநாத பண்டிதர் என்பவர் மாபாடியத்தின் பிரதிகள் சபாபதி நாவலரிடம் இருப்பதை அறிந்து பதிப்பிக்கத் தந்துதவுமாறு கேட்கிறார். அதற்கு அந்த சபாபதி நாவலர் இரண்டாயிரம் ரூபாய் கேட்ட காரணத்தாலும், அப்பிரதிகள் யாவும் சேர்த்தல் நீக்கல் திரித்தல்களுடன் பிழை மலிந்து இருக்கும் நிலையை நம்பகமான ஒருவர் மூலம் அறிந்த காரணத்தாலும் வாங்கும் எண்ணத்தைத் தவிர்த்து விடுகிறார். பிறகு வேறொருவர் வைத்திருந்த அரைகுறைப் பிரதியை ஆய்வு செய்து சிற்றுரை கலந்து பதிப்பிக்கிறார்.இந்த நிகழ்வு நடந்த பல வருடங்களுக்குப் பிறகு சூரியனார் கோயில் ஆதீனத்தார் திருவாவடுதுறை ஆதீனத்தாரிடம் பெற்ற பிரதியைப் படியெடுத்து அச்சேற்றினர். அதுவே இப்போது பரவலாகப் பதிப்பிக்கப்படுவது. அஃதாவது சபாபதி நாவலர் துறைசை ஆதீனத்தாரிடம் திரும்ப ஒப்படைத்த சேர்த்தல் நீக்கல் திரித்தல்களுடன் கூடிய பிரதியைத்தான் சூரியனார் கோயில் ஆதீனத்தார் அச்சேற்றினர்.
இப்போதுள்ள மாபாடியத்தில் பல இடங்களில் பல செய்திகள் பாதியோடு நின்று போவதும், சில செய்திகள் நூலின் போக்கிற்கு மாறாக இருப்பதும், சில செய்திகள் முன்னொடு பின் முரணுவதும் நன்கு அறியப்படுகிறது.
இதை மாபாடியம் பாடம் கேட்ட அனைவரும், ஊன்றிப் படித்த அனைவரும் நன்கு அறிவார்கள்.
சில முரண்பாடுகளை மகாவித்துவான் அருணை வடிவேல் முதலியார் போன்ற பெரியவர்கள் விளக்கியுள்ளார்கள். எனக்கு மாபாடியம் நடத்திய பெரியவர்களும் வகுப்பில் பல இடங்களில் இதுபற்றி எடுத்துக்காட்டுகளுடன் சொல்லி இருக்கிறார்கள். அவ்வாறு முரண்பாடான பகுதிதான் சிறப்புப் பாயிரத்தில் வருணத்துவம் பற்றி வரும் பகுதியும்.
இதை மகாவித்துவான் அருணை வடிவேல் முதலியார் அவர்கள் தம்முடைய சிவஞான போத மாபாடியப் பொருள் நிலை விளக்கத்தில் விரிவாக எழுதியுள்ளார்கள். அதைப் படிப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் சோம்பேறித்தனம் கொண்டவர்களால் இயலாது என்பதால் இங்கே எடுத்துக் காட்டுகிறேன். அப்பகுதி இதோ…
/////”தீக்கை உயிரைப் பற்றிய தூய்மை ஆதலால், அதனால் உடலைப் பற்றிய வருணம் மாறிவிடாது” என யோகிகள் குறிப்பது, அவர் தாமே இந்நூல் எட்டாம் நூற்பா இரண்டாம் அதிகரணத்தில் ஞானகுருவின் இயல்பை விளக்கும் இடத்தில், கூறிய உரைக்கு மாறாய் உள்ளது. அவ்வுரை வருமாறு:
“மாயா உருவினன் மாயா உருவினை ஏயான்”
அஃதாவது, ‘நித்தியனாகிய இறைவன் அநித்தியமாகின்ற மாயா சரீரத்தில் பொருந்த மாட்டான் ஆதலின், மாயா சரீரத்தையுடைய குருவை, சிவன் என்றல் மேற்கூறிய சித்தாந்த வாக்கியத்திற்கு முரணாக உள்ளது’ எனின் என்று எடுத்துக் கொண்டு,
“மாயை மாமாயை மாயா வரும் இரு வினையின் வாய்மை ஆய ஆருயிரின் மேவும் அருள் எனின் ஒளியாய் நிற்கும்”
என்னும் சிவப்பிரகாச வரிகளை மேற் கோளாகக் காட்டி,
“என்ப ஆகலின், முதல்வனுக்குத் திருமேனியாகிய சைதன்னியம் (ஆன்மா) முதல்வனைச் சார்ந்து அவ்வண்ணமாயவழி அவ்வுடம்பும் அவ்வாறு அருள்மய மேயாகலின் இழுக்கின்மையான், (இறைவன்) அவ்வுடல் இடங்கோடல் பொருத்தம் உடைமையான்” (ஞானகுரு சிவனேயாவன்).
மேற்கூறிய குருவியல்பை நோக்கினால், ‘பெத்தத்தின் நீங்கிச் சுத்தான்மாக்க ளாயினோரே ஞான குரவர் ஆதற்கு உரியவர்கள்’ என்பது தெளிவுற விளங்கும்.
‘அவ்வாற்றால் சீவத்தன்மை நீங்கிச் சிவத்தன்மை எய்தினோரும் பிறப்பால் உடம்பின்கண் அமைந்த வருணத் தன்மை நீங்கப் பெறார்; அவர் முன்னை வருணத்தவராய் இருந்து கொண்டு அதற்குரிய ஒழுக்கத்திலேதான் ஒழுக வேண்டும்’ என்றல் எப்படி நேரிய வழக்குரையாகும் என்பது தெரியவில்லை.
மேற்காட்டிய, “மாமாயை மாயை” என்னும் சிவப்பிரகாசப் பகுதியுட் கூறப்பட்டதே நூற்றுக்கு நூறளவான உண்மை. ‘உடம்பிற்கு’ என்று ஒரு தனித் தன்மையில்லை. உடம்பு ஒரு கூர்மையுடைய கருவி போன்றது. அக் கருவி அதனைக் கையாள்பவனது தன்மைக்கு ஏற்ப நல்லதற்கும் பயன்படலாம்; தீயதற்கும் பயன்படலாம். ‘இன்னதற்குத்தான் அது பயன்படும்; இன்னதற்குப் பயன்படாது’ என்பது அந்தக் கருவியைப் பொறுத்த வரையில் இல்லை. அது போல்வதுதான் உடம்பும். உயிர் நல்லதாயின் உடம்பும் நல்லதாய், நல்ல வழியில் ஒழுகுதற்குப் பயன்படும்; உயிர் தீயதாயின், உடம்பும் தீயதாய்த் தீய வழியில் நடப்பதற்கு உரியதாகும்./////
மேலும் பஞ்சாக்கர தேசிகர் வாக்காக அம்பலவாணதேசிக பரமாச்சாரியார் தம்முடைய சித்தாந்தப் பஃறொடையில் வருணத்துவத்தை மறுத்து எழுதியிருக்கிறார்.
(என்ன எழுதியுள்ளார்கள் என்று இங்கே வந்து கேட்பவர்கள் இருப்பார்கள். அவ்வளவு பெரிய நூலை இந்த முகநூலில் விரிவுரையாற்ற இயலாது என்றும், வேண்டுவோர் படித்தறிந்து கொள்ளுங்கள் என்றும் இப்போதே சொல்லி விடுகிறேன். படிப்பதற்கு இயலாத சோம்பேறிகளும் ஆராய்வதற்கு அறிவு இல்லாதவர்களும் படிக்காமலேயே ஆராயாமலேயே ஏதாவது பேசிக் கொண்டிருந்தால் அதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் இப்போதே சொல்லி விடுகிறேன்.)
அதேபோலச் சித்தாந்த சிகாமணி நூலில்,
“சாதியுற்றார்க்கில்லை தகும் சமயம் சங்கமமாம் நீதியுற்றார்க்கில்லை நிகழ்சாதி”
என்றும் எழுதியுள்ளார்கள். தம்முடைய ஆதீனத்தின் குரு முதல்வர் வாக்கை மீறிச் சைவத்தில் வருணத்துவம் உண்டு என்று மாதவச் சிவஞான சுவாமிகள் எழுதினார் என்பவர்கள் சுவாமிகளுக்கு மாபெரும் இழுக்கையே ஏற்படுத்துகிறார்கள் என்பது திண்ணம்! ஆகவே தற்போதைய பதிப்பில் உள்ள மாபாடியத்தை நன்கு ஆராய்ந்து முரண்பாடுகளை நீக்கிப் பயன்கொள்க!
திராவிட மாபாடியகர்த்தர் மாதவச் சிவஞான சுவாமிகள் திருவடிகள் போற்றி! போற்றி!

comments