சைவ ஆதீனங்கள்

சிவாகமங்கள் சொல்வதன்படி, வெவ்வேறு ஊழிகளில் சதாசிவப் பெருமானிடம் ஆகமங்களைப் பாடம் கேட்டோர் வழியே பல்வேறு குரு – சீட மரபுகள் தோன்றி நிலவியிருந்திருக்கின்றன. அவற்றில்  பல இன்று மறைந்துவிட்டன. சைவ சித்தாந்த மரபானது ஆலமர் செல்வனாக அமர்ந்த சிவபெருமானிடம் சித்தாந்தச் செம்பொருளைப் பாடம் கேட்ட எட்டுச்சீடர் வழியே பரவியதாக, திருமூலர் திருமந்திரத்தில் சொல்கின்றார். சனகர், சனாதனர், சனந்தனர், சனற்குமாரர் எனும் சனகாதி முனிவர் நால்வரும், புலிக்கால் முனிவர், பதஞ்சலி, சிவயோகமாமுனி, அழகிய சொக்கர் (சுந்தரானந்தர்) என்போர் அந்த நால்வர். சுந்தரானந்தரே தென்னகம் வந்து திருமூல மரபைத் துவக்கினார். இவற்றில் இன்று சனற்குமார செம்பெருந்தாயம், திருமூலர் செம்பெருந்தாயம் ஆகிய இரு மரபுகளே நீடித்திருக்கின்றன. சனற்குமார செம்பெருந்தாயத்தையே “திருக்கயிலாய பரம்பரை” என்கின்றோம். தமிழகத்திலுள்ள பல புகழ்பெற்ற ஆதீனங்கள் இப்பரம்பரையின் வழியே தோன்றியவை. இவற்றுக்கு மாற்றாக கந்தப்பரம்பரை, வீரசைவ மரபு, வேறு சித்தாந்த மரபுகளிலும் பல சைவ சித்தாந்த ஆதீனங்கள் இயங்கி வருகின்றன.

அ) மெய்கண்ட சந்தானம்

திருக்கயிலாய பரம்பரை என்ற சொல் பரவலாக இவர்களாலேயே ஆளப்பட்டுவருகின்றது. சனற்குமார முனிவரில் தோன்றி வளர்ந்த செம்பெருந்தாயம் இது. அகச்சந்தான மரபு, புறச்சந்தான மரபு எனும் இருவகையான குரவர் மரபைக் கொண்டது. 

 

அகச்சந்தான மரபு என்பது, திருநந்திதேவரில் துவங்கி சனற்குமார முனிவர், சத்தியஞான தரிசனிகள், பரஞ்சோதி முனிவர் எனும் நால்வரை அடக்கும். சிவபிரான் அருளிய மெய்ஞ்ஞானம் இவர்கள் வழியே தென்னகம் வந்துசேர்ந்தது. 

 

புறச்சந்தானமரபு பரஞ்சோதி முனிவரின் மாணவரான திருவெண்காடரில் துவங்குகின்றது. சிவதீக்கை பெற்று மெய்கண்டதேவர் என அழைக்கப்பட்ட திருவெண்காடர், சிவஞானபோதமும் அதற்கு வார்த்திகம் எனும் உரையும் அருளினார். 1232இல் பொறிக்கப்பட்ட திருவண்ணாமலைக் கோவில் மூன்றாம் இராசராச சோழன் கல்வெட்டு, அப்போது மெய்கண்டதேவர் வாழ்ந்துகொண்டிருந்ததைப் பதிவுசெய்கிறது. அண்ணாமலையில் இருந்த சித்தாந்த மடமான கோளகிமடத்தில் இவர் அப்போது வசித்ததாகச் சொல்லப்படுகின்றது.

 

மெய்கண்டதேவரின் குலகுருவாக விளங்கி, பின் அவருக்கே சீடராக அமர்ந்த சகலாகம பண்டிதர், அருணந்தி சிவாசாரியார் எனும் தீக்கைப்பெயர் தாங்கி சிவஞானபோதத்தை விரித்து சிவஞானசித்தியாரையும் இருபா இருபஃது எனும் நூலையும் அருளினார். மெய்கண்டதேவரின் சீடர் நாற்பத்தொன்மரில் இன்னொருவரான திருவதிகை மனவாசகங்கடந்தார், “உண்மைவிளக்கம்” நூலை அருளினார். சுவடிப்படிகளிலிருந்து இந்நூல் 1255இல் எழுதப்பட்டதாக அறியப்படுகிறது.

 

அருணந்தி சிவனாரின் சீடர் மறைஞான சம்பந்தர். இவர் நூலெதுவும் எழுதவில்லை என்றும் “சதமணிக்கோவை”யை அருளினார் என்றும் இருவேறு கருத்துண்டு. மறைஞானசம்பந்தரின் மாணாக்கரில் தலையானவர் உமாபதி சிவாசாரியார். இவர் எழுதிய எட்டு நூல்கள் பதினான்கு சாத்திரங்களுள் வைக்கப்பட்டு  “சித்தாந்த எட்டகம்” என்று போற்றப்படுகின்றன. சிவஞானபோதத்திற்குப் புடை நூலாக இவர் எழுதிய “சிவப்பிரகாசம்” அவற்றில் சிறப்பானது. இவர் 1313ஆம் ஆண்டில் அட்டக நூல்களில் இன்னொன்றான சங்கற்ப நிராகரணம் எனும் பரபக்க (பிறர்மத நிராகரிப்பு) நூலை அருளினார்.

 

மறைஞானசம்பந்தரிடமும் பின் உமாபதி சிவனாரிடமும் மாணாக்கராக இருந்தவர் அருள் நமச்சிவாயர். மச்சுச்செட்டியார் என்றும் பெயர். இவர் பாடிய ஐந்து நூல்கள் (ஞான பூசாகரணம்,ஞான பூசாவிதி, ஞான தீட்சா விதி, ஞான அத்தியேட்டி, போசன விதி) “ஞான அஞ்சகம்” என்று அழைக்கப்படுகின்றன. இவரது இரு சீடர்கள் வழியே தான் தமிழகத்தின் இரு தலைசிறந்த ஆதீனங்களான துறைசையும் தருமையும் செழித்தன.

அருள் நமச்சிவாயரின் இரு தலைமைச்சீடரில் ஒருவர் சித்தர் சிவப்பிரகாசர். சித்தர் சிவப்பிரகாசர், மூவலூர் வைத்தியநாதன் என்பாரை ஆட்கொண்டு “நமச்சிவாயம்” என்ற பெயரில் தீக்கை அளித்தார். அவரே திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய முதலாவது குருமகாசன்னிதானமான நமச்சிவாயமூர்த்திகள். அவரை அடுத்து இன்றுவரை 23 குருமகாசன்னிதானங்கள் துறைசை ஆதீன அரியணையை அலங்கரித்துள்ளனர்.

 

ஐந்தாம் குரவர் வேலப்பத் தேசிகரின் சீடரான நமச்சிவாயத் தம்பிரான் 1678இல் வினாவெண்பாவுக்கும் இருபா இருபஃதுக்கும் உரை எழுதினார். துறைசை ஆதீன மரபில் 10ஆம் குரவரான வேலப்பதேசிகர் காலத்தில் வாழ்ந்த மாதவச்சிவஞான யோகிகள் 1770 அளவில் சிவஞானபோதத்திற்கு தமிழ்ப்பேருரை வரைந்தார். 16ஆம் குரவரான மேலகரம் சுப்பிரமணிய தேசிகர்  (1869 – 1888), சிவஞானசித்தியாருக்குப் பதவுரை எழுதினார்.

இவ்வாதீன மரபில் மேலும் 14 பண்டார சாத்திரங்கள் உருவாகியுள்ளன. நமச்சிவாயக் குருமூர்த்திகளின் ஒரு சீடரான தட்சிணாமூர்த்தி தேசிகர், தசகாரியம், உபதேசப் பஃறொடை ஆகிய நூல்களை அருளினார். மூன்றாம் குரவரான அம்பலவாண தேசிகர் தசகாரியம், சித்தாந்தப் பஃறொடை உள்ளிட்ட பத்து பண்டார சாத்திரங்களை அருளியுள்ளார்.  ஒன்பதாம் குரவர் காலத்து (1658-1678) சாமிநாத தேசிகரின் தசகாரியமும் பத்தாம் குரவர் காலத்தில்  (1678-1700 ) பேரூர் வேலப்ப தேசிகர் அருளிய பஞ்சாக்கப் பஃறொடையும் ஆக இந்தப் பதினான்கும் “துறைசை பண்டார சாத்திரங்கள்” என்று சொல்லப்படுகின்றன. 

 

அருள்நமச்சிவாயரின் மற்றைய தலைமைச் சீடர்  காழிகங்கை மெய்கண்டார். காழிகங்கையாரின் மாணாக்கர் சீகாழி பழுதைகட்டிச் சிற்றம்பலநாடிகள். இவர் துகளறுபோதம் உள்ளிட்ட எட்டு அரிய நூல்களை அருளிய அறிஞர். இவரது அறுபத்தாறு சீடர்களுள் ஒருவர், சீகாழி பழுதைகட்டிச் சம்பந்த முனிவர். இவரும் சிவானந்தமாலை, சிற்றம்பலநாடி வெண்பா உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார். இவரது மாணாக்கரில் முதன்மையானோர் இருவர். அவர்களில் ஒருவர் பெயர், காவை அம்பலநாத சுவாமிகள். காவையாரின் சீடரான சத்தியஞான தேசிக தீர்க்கதரிசினியே வேளாக்குறிச்சி ஆதீனத்தை நிறுவியருளினார். 

 

துறவற மரபாக அன்றி, இல்லறத்தாராக இருப்பதால், இவ்வாதீனத்தை “குடியீச சன்னியாசி” என்று அழைப்பர். இவ்வாதீன குரவர் முன்பு பண்டாரசன்னதிகள் என்றும், தற்போது தேசிக பரமாசாரிய சுவாமிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். தற்போதுள்ளவர் 18ஆவது குரவர். 

 

தசகாரியம், அளவை விளக்கம் முதலிய நூல்களை எழுதிய களந்தை ஞானப்பிரகாசர், சிவப்பிரகாசத்துக்கு உரையெழுதிய இருவரான மதுரை ஞானப்பிரகாசரும், அவர் மாணாக்கர் மதுரை சிவப்பிரகாசரும் வேளாக்குறிச்சி ஆதீன மரபில் வந்தோராகச் சொல்லப்படுகின்றனர். இம்மரபில் குறிப்பிடத்தக்க இன்னொருவர் சிதம்பரம் கண்கட்டி மறைஞான பண்டாரம். இவர் வடமொழி சிவதருமோத்திரம் நூலைத் தமிழ்ப்படுத்தியதுடன், அரிய பல நூல்களும் அருளினார். சைவசித்தாந்தத்தில் ஆன்மானந்தவாதம் எனும் கோட்பாட்டை முன்வைத்து “முத்திநிலை” எனும் நூலை அருளியவர். 

 

வேளாக்குறிச்சி ஆதீனம் நெல்லைக்கு அருகே அம்பாசமுத்திரம் வேளாக்குறிச்சியில் உள்ளது. அதன் தலைமையிடம் தற்போது நாகப்பட்டினம் திருப்புகலூரில் இயங்குகின்றது.

சீகாழி பழுதைகட்டிச் சம்பந்தமுனிவரின் இன்னொரு மாணாக்கர், சிவபுரம் ஞானப்பிரகாசர். அவர் வழியே சிவபுரம் தத்துவப்பிரகாசர், செட்டித்தெரு ஞானப்பிரகாசர், கமலை ஞானப்பிரகாசர் எனும் வரிசையில் அடுத்தடுத்த சீடர்கள் தோன்றினர். கமலை ஞானப்பிரகாசர் ஒன்பது நூல்களை அருளியுள்ளார், அவரது முதன்மை மாணாக்கரில் ஒருவரே தருமபுர ஆதீனத்தை நிறுவிய குருஞானசம்பந்தர்.  இன்றுள்ள தமிழக ஆதீனங்களில் புகழ்பூத்த முதன்மையானதோர் ஆதீனம் தருமபுர ஆதீனம். பல்வேறு மருத்துவ, கல்வி உதவிகளை தமிழ்நாட்டில் இவ்வாதீனம் மேற்கொண்டு வருகின்றது. இன்றுள்ள ஆதீனம், 27ஆவது குரவராவார்.

தருமை ஆதீன முதற்குரவர் குருஞானசம்பந்தர் பேரறிஞர். சிவஞானசித்தியாருக்கு அவர் “ஞானாவரண விளக்கம்” எனும் பெயரில் உரை எழுதினார். அது இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை. அவரது “முத்திநிச்சயம்” எனும் இன்னொரு நூல், கண்கட்டி மறைஞான பண்டாரம் முன்மொழிந்த  ஆன்மானந்தவாதத்தை மறுப்பது. இன்னும் வேறு ஆறு நூல்களையும் அவர் அருளியுள்ளார்.

தருமையின் நான்காம் குரவர் மாசிலாமணி தேசிகர். அவரே சகலகலாவல்லிமாலை, மீனாட்சி பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட நூல்களை அருளிய  குமரகுருபர சுவாமிகளின் குரவரும் கூட. அவரது ஆணையின் வண்ணம் காசிக்குச் சென்று குமரகுருபரர் துவங்கிய குமாரசுவாமி மடத்தின் தொடர்ச்சியே இன்றுள்ள திருப்பனந்தாள் காசி மடம்.

கமலை ஞானப்பிரகாசரின் இன்னொரு தலைமை மாணாக்கரும், குருஞானசம்பந்தரின் ஒருசாலை மாணவருமான நிரம்பவழகிய தேசிகர், துழாவூர் ஆதீனத்தை ஆரம்பித்துவைத்தார். நிரம்பவழகிய தேசிகர், சிவஞான சித்தியார் சுபக்கத்துக்கும் திருவருட்பயனுக்கும் உரை வகுத்துள்ளார். 

 

தற்போதுள்ள துழாவூர் ஆதீனம், 29ஆவது குரவர் ஆவார். ஏனைய ஆதீனங்கள் போன்று துறவறம் பூணாமல் வெண்ணிறாடை பூண்டிருப்பதால் இவ்வாதீனத்தை “வெள்ளைவேட்டிமடம்” என்றும், இல்லறத்தாராக இருப்பதால் “குடியீச பரம்பரை” என்றும் அழைப்பதுண்டு. இம்மடம் காரைக்குடி அருகே துழாவூரில் அமைந்துள்ளது. இதன் கிளை திருமறைக்காட்டிலும் உண்டு. நாட்டுக்கோட்டை நகரத்தார் பலரின் குலகுருவாக வீற்றிருப்போர் இவ்வாதீனத்தோரே.

 

திருவண்ணாமலையில் கோளகி மடம் இருந்ததையும் அங்கு மெய்கண்டார் தங்கியிருந்து சித்தாந்தம் பரப்பியதையும் அறிகின்றோம். 17ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் ஞானப்பிரகாசர் இவ்வாதீனத்தின் மாணாக்கராக விளங்கிய காலத்திலே தான் சிவஞானசித்தியாருக்கு உரை வகுத்தார். 19ஆம் நூற்றாண்டில் இராமநாதபுர சேதுபதி மன்னர் கேட்டுக்கொண்டதற்கிணங்க திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடிக்கு மாற்றப்பட்டது. தற்போது 46ஆவது குரவர் வீற்றிருக்கிறார். முன்னைய 45ஆவது குரவர் குன்றக்குடி அடிகளார் சமூக சமத்துவத்துக்கு பாடுபட்ட அருளாளராகப் புகழ்பெற்றவர். 

கச்சிக்கலம்பகம் உள்ளிட்ட நூல்களை அருளிய கச்சி ஞானப்பிரகாசரால் 16ஆம் நூற்றாண்டளவில் தோற்றுவிக்கப்பட்டது தொண்டைமண்டல ஆதீனம். தற்போது இது ஐவர் அடங்கிய குழு மேற்பார்வையின் கீழ் அறக்கட்டளையாக இயங்கிவருவதுடன் தற்போது 233ஆவது குரவர் வீற்றிருக்கிறார். தருமை ஆதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஆதீனம்.

 

திருக்கயிலாய பரம்பரைகளில் ஒன்றாகச் சொல்லப்படுவது. திருஞானசம்பந்தரால் ஆரம்பிக்கப்பட்ட மடத்தின் தொடர்ச்சி என்று சொல்லிக்கொள்ளப்படுகின்றது. தற்போது 292ஆவது குரவர் வீற்றிருக்கிறார். 

தூத்துக்குடி அருகே பெருங்குளம் ஊரிலுள்ள ஆதீனம். பாண்டிய மன்னருக்கு செங்கோல் கொடுக்கும் புகழ்வாய்ந்ததெனத் தொன்மம். துறைசை ஆதீனத்தின் செல்வாக்கால் அண்மையில் மறுமலர்ச்சி கண்டது. சத்தியஞானதரிசினி முதல் குரவர். தற்போது 103ஆவது குரவர் வீற்றிருக்கிறார்.

 

திருவாரூக்கு அருகே அம்பர் மாகாளத்தில் இயங்கிவரும் சொர்க்கபுர ஆதீனம், அழகிய சிற்றம்பல தேசிகரால் 15ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. தற்போது 22ஆவது குரவர் வீற்றிருக்கிறார்.

 

தமிழகத்தின் வெள்ளைவேட்டி மடங்களுள் ஒன்று.

 

சீகாழியில் காழிக் கண்ணுடைய வள்ளலாரால் 15ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இவர் (மதுரை?) சம்பந்தப் பரம்பரையில் வந்த ஞானசம்பந்த முனிவரின் சீடராக சம்பந்த சரணாலயர் என்ற பெயரில் விளங்கினார். பின்னர் சீகாழியில் வள்ளலார் என்ற பெயரில் மடம் அமைத்தார். ஒழிவிலொடுக்கம் இவர் படைத்த அரிய நூல். வேறு சில சைவசித்தாந்த நூல்களையும் அருளினார். காழிக் கண்ணுடைய வள்ளல், ஐக்கியவாத சித்தாந்த மரபைச் சார்ந்தவர் என்ற கருத்தும் உள்ளது. இன்று இவ்வாதீனம் செயலிழந்து மறைந்துவிட்டது. 

 

16ஆம் நூற்றாண்டில் தில்லையில் ஆகம சிவப்பிரகாச தேசிகரால் அமைக்கப்பட்டது. இன்று செயலிழந்துள்ளது. 

 

திருமறைக்காட்டில் இயங்கிய ஆதீனம். யாழ்ப்பாணத் தொடர்பும் வீரசைவ உறவும் கொண்டிருந்தது. இன்று முற்றாக மறைந்துவிட்டது.

 

தருமை ஆதீன நான்காம் குரவர் ஆணையின் படி அவர் மாணவர் குமரகுருபரரால் (1625 – 1688 ) காசியில் தொடங்கப்பட்ட குமாரசுவாமி மடம், காசி மடத்தின் ஆறாம் குரவர் காலத்தில் திருப்பனந்தாளுக்கு மாற்றப்பட்டது. தற்போதும் தருமை ஆதீனத்தின் தொடர்புகளைப் பேணும் காசி மடத்தில் 21ஆவது தம்பிரான் குரவராக வீற்றிருக்கிறார்.

அபிதான சிந்தாமணியில் கிடைக்கும் பட்டியலின் படி, கடந்த நூற்றாண்டின் துவக்கம் வரை இயங்கிய பதினெண் சுத்த சைவ மடங்களில் (1) துறைசை, (2) தருமை, (3) வேளாக்குறிச்சி, (4) துழாவூர், (5) அருணை, (6) மதுரை, (7) செங்கோல், (8) சொர்க்கபுரம், (9) தொண்டைமண்டலம், (10) நாச்சியார்கோவில் ஆகிய பத்துமே தொடர்ந்து இயங்கிவருகின்றன. (11) சீகாழி, (12) தில்லை, (13) வரணி,  (14) நீலப்பாடி, (15) இராமேச்சரம் ஆகிய ஐந்து இன்று செயலிழந்துள்ளன. எஞ்சிய மூன்று சுத்த சைவ மடங்களும் கந்தப்பரம்பரையில் நீடித்த (16) சூரியனார்கோவிலும் திருமூலர் சந்தானத்தில் நீடித்த  (17) சாரமாமுனிவர் ஆதீனமும் (18) தாயுமானவர் ஆதீனமுமாம். திருப்பனந்தாள் காசி மடத்தை பதினெண் ஆதீனங்களில் ஒன்றாய்க் கருதும் வழக்கமில்லை.

ஆ) கந்தப்பரம்பரை

திருக்கயிலாய மெய்கண்டார் பரம்பரைக்கு மாற்றாக நீடித்துவந்த இன்னொரு தொன்மையான மரபு திருக்கயிலாய கந்தப் பரம்பரை ஆகும். இம்மரபு மாறுபட்ட சந்தான குரவர் வரிசையொன்றை முன்வைக்கின்றது.

சீகண்ட பரமசிவன் > கந்தப்பெருமான் > வாமதேவ முனிவர் > நீலகண்ட சிவனார் > விசுவேசுவர சிவனார் > சதாசிவ சிவனார் > சிவமார்க்கப் பிரகாசர் > சிவக்கொழுந்து தேசிகர்.

இம்மரபைச் சேர்ந்த சதாசிவ சிவனார் வடமொழி சிவஞானபோத நூலுக்கு  “சிவஞானபோத விருத்தி” என்ற பெயரில் 15ஆம் நூற்றாண்டில் உரை எழுதினார். அவரது மாணாக்கர் சிவமார்க்கப் பிரகாசரின் சீடரான சிவாக்கிரயோகிகள், சிவக்கொழுந்து தேசிகர் என்ற பெயரில் 16ஆம் நூற்றாண்டில் சூரியனார் கோவிலில் இந்த ஆதீனத்தை அமைத்தார். 

 

கந்தப் பரம்பரை தமிழ் மெய்கண்ட மரபை வடமொழி சிவாகம மரபோடு இறுக்கமாகப் பிணைக்க முயன்றது. இதனால் மரபான மெய்கண்ட சித்தாந்த மரபோடு சில இடங்களில் கந்தப் பரம்பரை முரண்படுவதைக் கண்ணுறலாம். சிவக்கொழுந்து தேசிகரின் மாணவரான வீழிச்சிவாக்கிரயோகிகள் பல்வேறு ஆகம மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி சிவஞானசித்தியாருக்கு எழுதிய உரை “சிவாக்கிர பாடியம்”  என்று அழைக்கப்படுகின்றது. மேலும் பிராமணர் அல்லாதாருக்குத் துறவு இல்லை என்ற சுமார்த்தக் கோட்பாட்டை மறுத்து ஆகமங்களிலிருந்து தொகுத்து இவரால் “சைவ சன்னியாச பத்ததி” எழுதப்பட்டது. வடமொழி வல்லவரான இவரால் பல ஆகமங்களுக்கு உரைகளும் இயற்றப்பட்டன. வீழிச் சிவாக்கிரயோகிகளின் மாணாக்கர் நந்தி சிவாக்கிரயோகிகள், சிவப்பிரகாசத்துக்கு உரை எழுதியுள்ளார்.

 

சூரியனார் கோவில் ஆதீனத்துக்குக்கும் துறைசை ஆதீனத்துக்கும் நல்லுறவு இருந்துவந்தது. வீழி சிவக்கொழுந்தாசாரியார் துறைசை ஆதீன முதலாம் குரவர் நமச்சிவாயக்குருமூர்த்திகளை அடிக்கடி சந்தித்து அளவளாவுவார் என்றோர் தொன்மமுண்டு. பின்னாளில் சூரியனார் கோவில் ஆதீன வம்சம் மறைந்துபோக, துறைசை ஆதீனத்தைச் சேர்ந்த ஒருவரே அங்கு குரவராக அமரும் மரபு ஏற்பட்டுவிட்டது. மரபாக அவர்கள் “திருக்கயிலாய கந்தப் பரம்பரை” என்ற பட்டத்தைத் தக்கவைத்தாலும், கோட்பாட்டளவில் அவர்கள் இன்று திருக்கயிலாய மெய்கண்டார் பரம்பரையைச் சேர்ந்தவர்களே. தற்போது 28ஆம் குரவர் சூரியனார் கோவில் ஆதீனத்தில் வீற்றிருக்கிறார்.

 

இ) திருமூலர் பரம்பரை

சனகாதி முனிவர் நால்வர், புலிக்காலார், பதஞ்சலியார், சிவயோகமுனி எனும் எழுவரோடு தனக்கும் ஆலமர் செல்வன் சித்தாந்த மெய்யியலைக் கற்பித்ததாக திருமூலர் பாடுகின்றார். அவரது குருமரபில் வந்த மடங்களெல்லாம் இன்று எஞ்சாது முற்றாக மறைந்துவிட்டன. எனினும் அவற்றின் வழிவந்ததாக நினைவுகூரப்படும் அல்லது உரிமைகோரப்படும் மடங்கள் இன்று மூன்று உள்ளன.

 

திருமூலர் குருமரபில் வந்த சாரமாமுனிவரின் மாணாக்கரான மௌனகுருசுவாமிகள், திருச்சி மலைக்கோட்டையில் மடம் அமைத்துத் தங்கியிருந்தார். மௌனகுரு சுவாமிகளின்  சீடரே தாயுமான சுவாமிகள் (1705 – 1742 ) இவர் இயற்றிய பராபரக்கண்ணி இவரது சித்தாந்தக் கோட்பாட்டை “சமரசம் உலாவு சன்மார்க்கம்” என்கின்றது. இவ்வாதீன மரபு இன்று மறைந்துவிட்டது தற்போது திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் உள்ள இம்மடம்  தனக்கென குரவர் எவரும் இல்லாதபோதும், தருமை ஆதீனத்தின் மேற்பார்வையின் கீழ் உள்ளது. இதைத் திருக்கயிலாய பரம்பரை சுத்தசைவ பதினெண் ஆதீனங்களுள் ஒன்றாகக் கருதுவது வழக்கம்.

தாயுமான சுவாமிகளுக்குப் பிந்தைய மாணாக்கர் மரபு பற்றி இன்று தெளிவான தகவல்கள் கிட்டவில்லை. அண்மைக்காலத்தில் அவர் பெயரில் ஒரு ஆதீனம் சீகாழிக்கு அருகே அன்னப்பன்பேட்டையில் இயங்கிவருகின்றது. தருமை, துறைசை ஆதீனங்களின் மாணாக்கர்கள் இம்மடத்துடன் நெருங்கிய தொடர்பு பேணியிருக்கிறார்கள். தற்போது திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இவ்வாதீனம் இருந்துவருகின்றது.

யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் சீடர் சிவாய சுப்பிரமுனிய சுவாமி எனும் வெள்ளையரால் 1949இல் கலிபோர்னியாவில் ஆரம்பிக்கப்பட்ட மடம், 1970 முதல் அமெரிக்காவின் ஃகவாய் தீவில் இயங்கிவருகின்றது. இம்மரபு திருக்கயிலாய திருமூலர் பரம்பரை எனச்சொல்லப்படுகின்றது.

(பெயர் அறியாக்குரு) > கடையில் சுவாமிகள் > செல்லப்பா சுவாமிகள் > யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகள் > அமெரிக்க சிவாயசுப்பிரமனிய சுவாமிகள் > போதிநாத வேலன் சுவாமிகள்.

ஈ) வீரசைவ ஆதீனங்கள்

கன்னட நாட்டில் புகழ்பெற்ற வீரசைவ மரபு, தமிழக மெய்கண்ட சித்தாந்தத்துடன் உரையாடி, இடைப்பட்ட காலத்தில் வீரசைவசித்தாந்த மரபொன்று நீடித்துள்ளது. இம்மரபைப் பின்பற்றியவர்கள், வழிபாட்டுத் தளத்தில் வீரசைவ முறைப்படி இலிங்கத்தை உடலில் தரித்துக்கொண்டு இட்டலிங்கபூசை செய்தபோதும், மெய்யியல் தளத்தில் மெய்கண்டார் சித்தாந்தக் கண்ணோட்டத்தில் சிவாகமங்களைக் கடைப்பிடித்து வந்தார்கள். வீரசைவத்தின் தாக்கத்தால், அல்லமப்பிரபு முதலிய அருளாளர்களையும் வீரசைவ அஞ்சு ஆசாரியாரை வழிபடும் வழக்கமும் இவர்களிடம் காணப்பட்டுள்ளது. இம்மரபின் கோட்பாட்டை வரையறுப்பதில் துறைமங்கலம் ஞானப்பிரகாசர், துறையூர் ஞானப்பிரகாசர், சாந்தலிங்க சுவாமிகள் பெரும்பணியாற்றியுள்ளனர். தமிழகத்தில் பன்னிரு வீரசைவ மடங்கள் நீடித்ததாகச் சொல்லப்படுகின்றது. கும்பகோணம் பெரியமடம், திருப்போரூர் மடம் முதலியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. பின்னாளில் இம்மரபு ஒப்பீட்டளவில் நீர்த்துப்போனாலும், தமிழ் வீரசைவ ஆதீனங்கள், நூறாண்டுகளுக்கு முன் வரை, தமிழகத்திலிருந்து இலங்கை வரை நீடித்திருந்தன.

இவ்வாதீனத்தின் முதல் குரவரான துறையூர் சிவப்பிரகாசர், திருவாவடுதுறை ஆதீனத்தின் முதற்குரவர் நமச்சிவாயமூர்த்திகளின் சீடர்களில் ஒருவர்.  16ஆம் நூற்றாண்டு அரசியல் குளறுபடிகளால் தில்லைச் சிதம்பரம் கோவிலில் வழிபாடுகள் முட்டடைந்தபோது,  அக்கோவிலை மீள இயங்கச் செய்வதற்காக, அவர் விசயநகரப் பேரரசின் இலிங்கமநாயக்கரைச் சந்திக்கச் சென்றார். இலிங்கமநாயக்கர் இலிங்கம் தரியாதோரைக் காணமாட்டார் என்பதால், இலிங்கம் தரித்து அவரைக் கண்டு தன் கோரிக்கையை நிறைவேறச் செய்தார். அன்றுமுதல் வீரசைவ மரபையே கடைப்பிடிக்கலானார்.

 

தன் அடியார் ஒருவர் துறையூரில் தனக்கென நிறுவிய மடமொன்றில் தங்கியிருந்த ஆதிசிவப்பிரகாசர் திருவண்ணாமலையில் நீடித்த வீரசைவ ஆதீனத்திலும் வீற்றிருக்கலானார். பின்னாளில் ஞானக்கூத்த தேசிகரை அண்ணாமலை மடத்தில் அமர்த்தி, தான் பழையாறைக்கருகே சீவசமாதி அடைந்தார். ஞானக்கூத்த தேசிகர் துறையூர் ஆதீனத்தின் இரண்டாம் குரவராய் அமர்ந்தார்.

 

ஆதிசிவப்பிரகாசரின் இன்னொரு சீடரான சாந்தலிங்க சுவாமிகளின் மாணாக்கர் கன்னட இளவரசர் குமாரதேவர் விருத்தாசலத்தில் மடமமைத்துத் தங்கியிருந்தார். சாந்தலிங்கர் பேரூரில் தனிமடம் அமைத்தபின்னர், குமாரதேவர் மடம் திருத்துறையூர் ஆதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த இருபத்தோராம் குரவர் காலத்தில் இவ்வாதீனத்தின் முதன்மைக்கிளையாக குமாரதேவர் மடம் மாறியது. இன்று பேரூர் ஆதீனத்தின் உதவியுடன் பரிபாலிக்கப்படுகின்றது.

 

பாலைய சுவாமிகள் எனும் வீரசைவஞானியால் புதுச்சேரி அருகே பொம்மையம்பாளையத்தில் இவ்வாதீனம் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

கற்பனைக்களஞ்சியம், நன்னெறிச் சிவப்பிரகாசர் என்றெல்லாம் புகழப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாசர் பாலையரின் மாணாக்கர்  ஆவார். துவக்கத்தில் தருமை வெள்ளியம்பலவாணரின் சீடராக விளங்கி தமிழும் சித்தாந்தமும் கற்ற இந்தச் சிவப்பிரகாசர், பின்பு பொம்மையம்பாளையம் பாலைய சுவாமிகளின் மாணாக்கராகி வீரசைவ நெறியில் ஈர்க்கப்பட்டார். எனவே தமிழகத்தின் சைவசித்தாந்தத்தையும் வீரசைவத்தையும் இணைக்கும் பாலமாக விளங்கினார். வீரசைவ ஞானியான அல்லமப்பிரபுவின் புகழைக்கூறும் “பிரபுலிங்கலீலை”, கிறித்தவத்தை சைவப்பார்வையில் மறுத்த முதல் நூலான “ஏசுமதநிராகரணம்”, நால்வர் நான்மணிமாலை முதலிய பல நூல்களை யாத்தவர் இவர்.

 

தற்போது திண்டிவனம் அருகே மயிலத்தில் இயங்கிவரும் இவ்வாதீன குரவர் இருபதாவது பட்டம் ஆவார்.

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளாரால் 17ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. சாந்தலிங்க அடிகளார் வீரசைவ மரபு சார்ந்தவர். இவரது குரவர் ஆதிசிவப்பிரகாசர் என்றறியப்பட்ட துறையூர் சிவப்பிரகாசர் ஆவார்.

 

ஆதிசிவப்பிரகாசர் திருவண்ணாமலையில் தங்கியிருந்தபோது சாந்தலிங்கருக்குக் குருவாக அமர்ந்தார். பின் அவர் திருத்துறையூரில் வீரசைவ மடம் அமைத்துத் தங்க, சாந்தலிங்கர் பேரூரில்  மடம் அமைத்தார். இவ்வாறு திருவாவடுதுறை ஆதீன மரபில் வந்ததால் பேரூர் ஆதீனமும் இன்று தன்னை திருக்கயிலாய பரம்பரை என்றே அழைத்துக்கொள்கின்றது. மெய்கண்ட சித்தாந்தத்துக்கும் வீரசைவத்துக்குமான சமரசத்தைப் பேச சாந்தலிங்க சுவாமிகள் “அவிரோத உந்தியார்” எனும் நூலை அருளினார். தன் சமகாலத்தில் வாழ்ந்த இன்னொரு அறிஞரான துறைமங்கலம் சிவப்பிரகாசருடனும் நல்லுறவில் இருந்தார்.

பேரூர் ஆதீனம் மக்கள் மத்தியில் இறங்கி சைவப்பணி புரிந்த ஆதீனங்களில் குறிப்பிடத்தக்கதாகும். சமகாலத்தில் தனித்தமிழ்ப்போக்குக்கு ஆதரவளிக்கும் முதன்மை ஆதீனங்களில் ஒன்றாக பேரூர் ஆதீனம் விளங்குகின்றது.

யாழ்ப்பாணத்தின் வடபால் காங்கேசன்துறைக்கு அருகேயுள்ள சிவத்தலம் கீரிமலை நகுலேச்சரம். அதன் அருகே இரேணுகாசாரியர் பெயரில் வீரசைவ மடமொன்று நெடுநாள் நிலவிவந்திருந்தது. இரேணுகாசாரியார் என்பது வீரசைவ ‘அஞ்சு ஆசாரியாரில்’ முதலாமவரின் பெயர். இம்மடத்துக்கும் திருமறைக்காட்டு வரணி ஆதீனத்துக்கும் தெற்கே தம்பட்டை வீரசைவ மடத்துக்கும் நெருங்கிய உறவு நிலவியதாகச் சொல்கிறார்கள். இன்று இம்மடம் மறைந்துவிட்டது.

12ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகோன் படையெடுப்பின் போது மல்லிகார்ச்சுனபுரத்திலிருந்து இலங்கை வந்த வீரசைவர்கள் குடியேறிய முதன்மையான இடம் தம்பட்டை. முன்பு தம்பட்டர்காமம் என்றழைக்கப்பட்ட அவ்வூர், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்குத் தெற்கே 70 கிமீ தொலைவில் உள்ளது. தம்பட்டையில் வசித்த  வீரமாகேசுவர குருலிங்க சங்கமர், மட்டக்களப்பில் திருப்படைக்கோவில்கள் என்றழைக்கப்பட்ட திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி கோவில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம், கோவிற்போரதீவு சித்திரவேலாயுத சுவாமி கோவில் மூன்றிலும் தங்கி அடியாரை நெறிப்படுத்தி வந்தனர். கீரிமலை இரேணுகாசாரியர் மடத்திலிருந்து வருவோரும், கதிர்காமம் செல்லும் வீரசைவர்களும் தம்பட்டர்காமம் பண்டிதார்ச்சுன தேவர் மடத்தில் தங்கிக் கற்பது வழக்கமாக இருந்தது. பண்டிதார்ச்சுன தேவர் என்பது வீரசைவ ‘அஞ்சு ஆசாரியரில்’ ஒருவரான பண்டிதாராத்தியரின் பெயர்.

 

இம்மடம் ஐரோப்பிய ஆட்சிக்காலத்தில் மறைந்துவிட்டது. சமய ஆட்சி எல்லைகள் சுருங்கி, 1970களில் மட்டக்களப்பின் தென்பாகத்திற்கான இறுதிக் குரவராக விளங்கியவர் இலிங்கதாரியான “அக்கரைப்பற்றுப் பகுதிக்குருக்கள் நல்லதம்பிக்குருக்கள்” ஆவார். 

உ) ஏனைய சைவ மடங்கள்

ஏனைய ஆதீனங்கள்

காலத்துக்குக் காலம் வெவ்வேறு ஆதீனங்களும் மடங்களும் உருவாகி, சைவசித்தாந்தச் செந்நெறியை வளர்ப்பதில் பெரும்பங்காற்றியுள்ளன. அவற்றில் சில:

  1. கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம்

  2. கும்பகோணம் வீரசைவப் பெரிய மடம்

  3. திருப்போரூர் வீரசைவ மடம்

  4. பாலசிவஞான சுவாமிகள் பரம்பரை சிதம்பரம் மௌனகுருசாமி மடம்.

  5. காஞ்சி கண்ணுடை வள்ளலார் மடம்.

  6. சைலாபுரி ஆதீனம்

  7. நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம், யாழ்ப்பாணம்

  8. தென்கயிலை ஆதீனம், திருக்கோணமலை