அலகிலா ஆடல்,சிவப்பிரகாசக் கதவம் – கொழும்பில் நடைபெற்ற வெளியீட்டு விழா

கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் எழுதிய அலகிலா ஆடல்-சைவத்தின் கதை நூலும், சித்தாந்தரத்தினம் திரு.ந.சிவபாலகணேசன் அவர்கள் எழுதிய சிவப்பிரகாசக்கதவம் நூலும் இலங்கை சைவநெறிக் கழகத்தால் 20- 10 – 2018ம் ஆண்டு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டன.
 

இவ்வெளியீட்டு விழாவிற்கு முதன்மை விருந்தினராக பேராசிரியர் சி.பத்மநாபன் அவர்களும், திருவருள்மிகு விருந்தினர்களாக சிவத்திரு.கு.வை.க.வைத்தீஸ்வரக்குருக்கள், சிவத்திரு.சு.சிவராமக் கிருஷ்ணக்குருக்கள்,சித்தாந்தச்செம்மல் சிவத்திரு.ஈசான சொர்ணலிங்க தேசிகர் முதலியோரும்,

பீடுடை விருந்தினர்களாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் திரு.மா.தவயோகராஜா,அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொதுச்செயலாளர் திரு.வே.கந்தசாமி,அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொருளாளர் திருமதி அபிராமி கயிலாசப்பிள்ளை அம்மையார், திரு.மா.கோ.காண்டீபன் (கணக்காளர் – இந்து சமய கலாச்சாரத் திணைக்களம்), இந்து சமயக் கலாச்சாரத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு.இ.கர்ஜீன், சித்தாந்தச் செம்மணி திரு.செல்.நவநீதகுமார்,திருமுறைச்செல்வர் திரு.கந்தையா ஜெகதீசன் ஆகியோர் கலந்துகொண்டதுடன்,

மாண்புறு விருந்தினராகக் கழகத்தின் இரு காப்பாளரில் ஒருவராகிய சிவத்திரு.க.இரகுநாதன் (அறக்காவலர் -கதிர்வேலாயுதசுவாமி தேவஸ்தானம் – கொழும்பு 13) அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.மற்றைய காப்பாளராகிய விடைக்கொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா அவர்கள் தவிர்க்கமுடியாத காரணத்தினால் கலந்துகொள்ளமுடியாமற் போயிற்று.

சிவப்பிரகாசக் கதவத்தின் நூல் அறிமுகவுரையைத் சிவத்திரு.தர்சகன் ஐயரும், நூல் நயவுரையை சித்தாந்தரத்தினம் மரு.ச.கார்த்திகைக்குமரன் அவர்களும் பலரும் பாராட்டுமாறு திறம்பட ஆற்றினர். அலகிலா ஆடல்- சைவத்தின் கதையின் நூல் அறிமுகவுரையை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரீகத்துறையின் தலைவர் கலாநிதி. திருமதி.சாந்தி கேசவன் அம்மையாரும் நூல் நயவுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரீகத்துறையின் விரிவுரையாளர் சைவப்புலவர்.திரு.சி.இரமணராஜா அவர்களும் அவையோர் பாராட்டுமாறு திறம்பட ஆற்றினர். நூல் ஏற்புரைகளை நூலாசிரியர்கள் வழங்கினர்.

அச்சுவேலி சிவத்திரு.குமாரசுவாமிக் குருக்களின் நினைவாக, சைவாக நூலொன்றுக்கு விருதுவழங்கவேண்டுமென்று கருதி, சிவபூசைமுறைகளிற் சித்தாந்த விளக்கம் (ஆன்மார்த்தம்) என்னும் நூலுக்கு “சிவத்திரு.அச்சுவேலிக் குமாரசுவாமிக் குருக்கள் நூல் விருது” வழங்கப்பட்டது. இவ்விருதினை அச்சுவேலிக் குமாரசுவாமிக் குருக்கள் பரம்பரையில் வந்த சிவத்திரு.கு.வை.க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் , நூலாசிரியர் சிவத்திரு.ஈசான சொர்ணலிங்க தேசிகர் பெருமானுக்கு வழங்கிச் சிறப்புச்செய்தார்.

நூல் வெளியீட்டு விழா குறித்த விளம்பரம் மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் அரங்கம் சஞ்சிகையினர் (18- 10 – 2018) இலவசமாக வெளியிட்டுச் சிறப்பித்திருந்தனர்.

comments