மாத்தவள் வீற்றிருக்கும் மாத்தளையென்னும் சிவபூமி!

மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பாக  ஆலய நிர்வாக சபையினரின் சார்பாக கலாபூஷணம் சுப்பிரமணியம் புண்ணியசீலன் அவர்களின் வேண்டுகோளிற்கமைவாக, பெப்பிரவரி மாதம் 27ம் நாள் மகோற்சவத்திருவிழாவின்போது
“சைவசமயம் என்னும் அபிராமிசமயம் நன்றே” என்னும் தலைப்பிற் சொற்பொழிவாற்றும்பொருட்டு இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் வைத்தியக் கலாநிதி சைவத்திரு.கி.பிரதாபன் ஈசான தேசிகர் அவர்கள்,
விடைக்கொடிச்செல்வர் திரு.சின்னத்துரை தனபாலா அவர்களுடனும் இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித் தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்களுடனும் இணைந்து சென்றிருந்தார்கள்.
மாத்தவள் வீற்றிருக்கும் மாத்தளை!
அம்பிகை அடியாரொருவரின் கனவிற்தோன்றி வில்வமரத்தடியிற் கற்சிலையை வெளிப்படுத்தி, பூர்வீகமாய்ப் பண்டுதொட்டு விளங்கிய வழிபாட்டிடத்தைக் காட்டியருளியமையாற் இத்திருத்தலமும் ஏனைய புராதன சைவாலயங்கள் போன்று புராதன திருத்தலம் என்பது தெளிவாகின்றது. இப்புராதன வழிபாட்டிடம் பெருங்கோயிலாக திருவருட்சம்மதத்துணையாற் எழுப்பப்பட்டு, இன்று நாட்டின் அனைத்துப்பாகத்திலிருந்தும் சைவமக்களுடன் பௌத்தர்களும் ஏனைய மதத்தாரும் வந்து வழிபட்டு அருள்பெற்றுய்யும் திருத்தலமாக விளங்கிவருதல் அம்பிகையின் அருட்சிறப்புக்கு தக்கசான்றாகும்.
அருவிகளும் மலைகளுமாக இயற்கை அன்னை எழில் நடமிடும் மாத்தளை மாநகரின் பெயரே, முத்துமாரியம்மனின் திருவருளினாலேயே உண்டாகியதென்னும் உண்மையை, மாத்தளை என்னும் பெயரின் உட்பொருளினூடாகத் துணியலாம்.
அபிராமிப்பட்டர் தமது அபிராமி அந்தாதிப் பதிகத்திற் அம்பிகையை மாத்தவள் என்று குறிப்பிடுகின்றார். மாத்தவள் என்னும் திருப்பெயர், சிவபெருமானை நோக்கிப் பெருந்தவம் புரிந்தவள் என்றும்; சிவசரியை,சிவகிரியை,சிவயோகம்,சிவஞானம் என்னும் நான்கு மார்க்கங்களிலும் பெருந்தவமுடையார்க்கு அருளுபவள் என்றும் பொருள் விளக்கமுறும்.  மாத்தவளாகிய அம்பிகை வீற்றிருந்து அருள்பாலிக்கும் முத்துமாரியம்மன் திருத்தலம் அமையப்பெற்றுள்ள பெருநகர் மாத்தளையென்று விளங்குதல் இயல்புதானே!
சிவபூமியில் ஓர் சிவபூமி!
ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதுபோல், இலங்கை மணித்திருநாடு சிவபூமியென்று திருமந்திரத்திற் போற்றப்பட்டமைக்கு மாத்தளை மாநகரே போதுமான சான்றாக விளங்குகின்றது.  ஏழுமுககாளியம்மன் ஆலயம், சுணங்காம பிள்ளையார் ஆலயம், வெள்ளைக்கல் அழகர்பெருமாள் கோயில், கோம்பிலிவெல முத்துமாரியம்மன் ஆலயம்,  முத்துவிநாயகர் ஆலயம்,  கதிர்வேலாயுதசுவாமி கோயில், மடத்துப் பிள்ளையார் கோயில், சிந்தாக்கட்டி முருகன் கோயில் என்று மாத்தளை முத்துமாரியம்மனைச் சூழ நாற்புறமும் சைவாலயங்கள் பலதிகழ்ந்து, சிவமணம் கமழ்ந்தவாறுள்ளன.
இத்திருத்தலத்திற்கு அருகில் அமையப்பெற்றுள்ள சிந்தாக்கட்டி முருகன் ஆலயம் மலையகத்தின் உகந்தையென்று போற்றுமாறு விளங்குவது கண்கூடு. திருப்பணிகள் நடைபெற்றுவரும் இவ்வாலயத்தினை போற்றி வளர்க்கவேண்டியதும் சைவர்கள் அனைவரினதும் கடமையாகும்.
சமூகப்பணிகளின் மகுடம்!
1975ம் ஆண்டளவில் சமயவகுப்புகள் ஆலய நிர்வாகசபையினால் தொடங்கப்பெற்று, அறநெறி வகுப்பாக இன்று பெருவிருட்சம் கண்டுள்ளது.இலங்கையிலேயே முதன்முதலில் சமயவகுப்புகள் தொடங்கப்பெற்று, ஏனைய ஆலயங்களுக்கு முன்னுதாரணத்தினைத் தோற்றுவித்த ஆலயமென்னும் சிறப்பு மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு உரித்தானதாகும். 1993ம் ஆண்டில் பாலர்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதோடு, 1996ம் ஆண்டில் இலவசத் தையல் பயிற்சி வகுப்புகளும் ஆரம்பித்துவைக்கப்பட்டன.  மேலும், 2001ம் ஆண்டில் “ஓம் சக்தி கணனி பயிற்சி வகுப்பும் ஆரம்பித்துவைக்கப்பட்டன. இப்பணிகளெல்லாம் சீரும்சிறப்புமாக ஆலய நிர்வாக சபையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருதல் சைவமக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.
தேர்த் திருவிழா
1934ம் ஆண்டில் முத்தேர் பவனி தொடங்கப்பெற்றதோடு, 1965ம் ஆண்டுமுதல் பஞ்சரத பவனியாகத் தேர்த்திருவிழா சிறப்புற்று, இலங்கைத் திருநாட்டினையே மாத்தளை மாநகரிற் குவிக்கும் பெருவிழாவாக; அருளும் புகழும் ஓங்கிவிளங்கும் தமிழர் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கிவருதல் ஆலயத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.
சைவப் பிரசங்கங்கள்
நாவலரால் புத்துயிரளித்து உண்டாக்கப்பட்ட பிரசங்கப்பணி மங்கிவிடாது காக்கின்ற பெரும்பணியை ஆலய நிர்வாக சபையினர் சிரம்மேற்கொண்டு முன்னெடுத்துவருகின்றனர். மகோற்சவக் காலமாகிய 26 நாட்களும் பிரசங்கத்தினை நடத்திவருகின்றனர். உள்நாட்டுச் சொற்பொழிவாளர்களுக்கு பெரும்பாலான நாட்களினையும், தமிழகச் சொற்பொழிவாளர்களுக்கு ஏனைய நாட்களையும் ஒதுக்கித் திறம்பட இத்திருப்பணியை பல தசாப்தங்களாகச் செய்துவருகின்றனர். தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கும் சொற்பொழிவாற்றுவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கிவருகின்றனர்.

வேண்டியனவெல்லாம் அருளுகின்ற சிவகாமியின் திருவடிவாய் எழுந்தருளி அருளாட்சிசெய்யும் முத்துமாரியம்மனின் திருவருட்சிறப்பாலும், ஆலய நிர்வாக சபையினரின் சமயப்பணிகள்,சமூகப்பணிகளாலும் சிறந்தோக்கி விளங்கும்  மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தினைத் தரிசியாத கண்களும் கண்களோ!!!

( வீரகேசரி பத்திரிக்கையில் பிரசுரமாகிய கட்டுரை வடிவம்)

comments