இந்துத்துவ சுமார்த்தமத தரகர்களின் சூழ்ச்சியினால் இலங்கைப் பிரதமர் திரு.இரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்பில் இலங்கை சைவாலயப் பூசகப்பிராமணர் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் சைவாலய சிவாகமப் பூசைப்பயிற்சிக்கு அனுப்பிவைக்கும் செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகச் செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. இதனை இலங்கையில் உள்ள இந்துகுருமார் அமைப்புக்கள் சிலவும் வரவேற்று அறிக்கைகள் வெளியிட்டன. தமிழ்நாட்டில் காஞ்சி சங்கரமடம் சிவாகமப்பாடசாலை ஒருசில சிவாசாரியரைக் கொண்டு நடத்திவருகின்றனர். இப்பாடசாலையிலேயே இவ்வாறு இலங்கை சைவாலய அந்தணர் இலங்கை அரசால் இந்துசமய கலாசார அமைச்சினூடாக சேர்க்கும் செயற்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
காஞ்சி சங்கரமடம் என்பது சுமார்த்தமத மடம். இம்மடத்தார் சிவாகமங்களைச் சிவன் வாக்காக ஏற்பதில்லை. திருமுறை மெய்கண்ட சாத்திரங்களைச் சிவன் வாக்காக ஏற்பதில்லை. இம்மடத்தார் சைவாகமப்படி புறச்சமயத்தாரேயொழிய சைவசமயத்தார் அன்று. இம்மடத்தார் பின்பற்றும் சமயம் மாயாவாதமதம், ஏகான்மவாதமதம், சங்கரவேதாந்த மதம் என்றெல்லாம் அழைக்கப்படும் சுமார்த்தமதமாகும். இம்மதத்தார் நாவலர் காலத்தில் சிவனடியாருக்குப் பூசைசெய்யும் சிவாசாரியரைக் கீழானவர்(பதிதர்) என்று கண்டித்தபோது, நாவலர்பெருமான் வெகுண்டெழுந்து இம்மதத்தார் சிவாசாரியர்களைக் கண்டிக்கும் உரிமையில்லாத புறச்சமயத்தார் என்று சுட்டியருளினார். சைவத்தில் நாயன்மார்கள் யாவரும் சிவவடிவேயாகும். சுமார்த்தமதத்தார் இக்கொள்கையை ஏற்பதில்லை. எனவே, நாவலர் இந்தவேறுபாட்டை உலகார் தெளியும்பொருட்டுக் கண்டித்தருளினார். பெரியபுராண வசனத்தில் உண்மை நாயனார் சரிதத்தில் இம்மதத்தார் நாயன்மாரை ஏற்காமல் இருக்கும் இழிநிலையைக் கண்டித்தருளுகின்றார். இதன்பிறகு யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை பெருமான் இம்மதத்தாருடன் வாதிட்டு வென்றதும், காசிவாசி செந்திநாத ஐயர்பெருமானால் ”மாயாவாததும்சகோளரி” என்று பட்டமளித்துப் போற்றப்பட்டார். சைவசமயத்தின் குரவர்களில் ஒருவராகிய மாணிக்கவாசகப்பெருமானும் ”மிண்டிய மாயாவாதச் சண்டமாருதம்” என்று ஆதிசங்கரரால் தாபிக்கப்பட்ட இம்மதத்தைக் கண்டித்தருளியுள்ளார். சைவசமய சந்தானகுரவர்களும் ”மாயாவாதப்பேய்” என்று இம்மதத்தைக் கண்டித்தருளியுள்ளனர். தாயுமானசுவாமிகள் ”பொய்கண்டார்” என்று இம்மதத்து தாபகராகிய ஆதிசங்கரரையும் வைணவத் தாபகர்களாகிய இராமனூசர் மத்வர் முதலியோரினையும் சுட்டியருளுகின்றார். சைவாகம நூல்கள் சுமார்த்தமதத்தைப் புறச்சமயத்தார் என்று சுட்டியுணர்த்துகின்றன.
சைவசமயத்துக்கும் சுமார்த்தமதத்திற்குமான வேறுபாடுகளை இனங்காணமுடியாதவாறும், சுமார்த்தமதம் என்றால் என்னென்றே தெரியாதவாறும் தமிழர் ஒழியவேண்டும் என்னும் நரித்தனத்தோடு கட்டமைக்கப்பட்டுள்ள நாமமே ”இந்துமதம்” என்பதாக இன்று உள்ளது. அதாவது, சுமார்த்தமதத்தில் இஷ்டதேவதை வழிபாடென்ற ஒன்று உண்டு.
அதாவது, ”உயிர்கள் என்ற ஒன்றில்லை; பிரம்மமே உயிர்களாய்த் திரிபடைந்துள்ளது; அந்த திரிபுக்குக் காரணம் மாயை; பிரம்மம் மட்டுமே உள்ளது; இதனை அறியும் ஞானம் சுமார்த்தப் பிராமணப் பிறவியாலேயே வாய்க்கும்; பெண்களுக்கு இந்த ஞானம் ஒருபோதும் வாய்க்காது; எனவே பிறப்புவழி வர்ணாச்சிரமப்பயங்கரவாதம் அவசியமானவொன்று” என்னும் அடிப்படைக் கொள்கையோடு, இந்த பிரம்மஞானத்தை உணரும்வரை சிவன்,விஷ்ணு,அம்பாள்,பிள்ளையார்,முருகன்,சூரியன் என்னும் தேவதைகளில் ஒன்றை இஷ்டதெய்வமாக வழிபடலாம் என்றும் கூறும் மதமே சுமார்த்தமதமாகும். எனவே, சிவனை வணங்கும் சைவர்கள், திருமாலை வழிபடும் வைணவர் முதலியோர் யாவரும் பிரம்மஞானம் அடையும்வரை உழலும் இஷ்டதேவதை வழிபாட்டாளர் என்றும் அவர்கள் யாவரும் சுமார்த்தமதத்தின் உட்பிரிவினரேயாகும் என்றும் காட்டும் நரித்தந்திரத்தில், ”சுமார்த்தமதம்” என்றால் என்னென்றே அறியாதவாறு அச்சொல்லைப் புழக்கத்தில் பயன்படுத்தாது, தம் இஷ்டதெய்வ வழிபாட்டையே சிவனை வழிபடுவோர் சைவர்,திருமாலை வழிபடுவோர் வைணவர், உமாதேவியாரை வழிபடுவோர் சாக்தர், பிள்ளையாரை வழிபடுவோர் காணபத்தியர்,முருகனை வழிபடுவோர் கௌமாரர், சூரியனை வழிபடுவோர் சௌரர் என்றும்; இந்த ஆறு(சண்)மதங்களையும் ஒருங்கிணைத்தவரே தம்மதத்துத் தாபகராகிய ஆதிசங்கரர் என்றும், அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட மதமே இந்துமதம் என்றும் இட்டுக்கட்டிப் பரப்பலாயினர். அதாவது, சுமார்த்தமதத்தின் பிறிதொரு பெயரே இந்துமதம் என்பதாகவே சுமார்த்தமதத்தார் மிகத்தந்திரமாகத் தம்மதப்பெயரை மக்கள் அறியவிடாது காத்து, இந்துமதம் என்னும் பெயரைத் தமதாக்கி, அப்பெயரில் சைவசமயம் முதலிய சமயங்களில் ஊடுருவி ஏப்பம்விடலாயினர்.
ஆதிசங்கரர் சண்மதம் தாபித்தார் என்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை. பிற்காலத்தில் இட்டுக்கட்டிய இக்கதையைக் கொண்டு, சைவசமயத்தாரைச் சிந்திக்கவிடக்கூடாதென்பதற்காக, சைவாகப்பாடசாலைகள் சைவ ஓதுவார்களுக்கும் சிவாசாரியர்களுக்கும் மாதாந்த உதவித்தொகை, திருமுறைப் பயிற்சிகள், சைவசித்தாந்தப் பயிற்சிகள் என்பவற்றை நடத்திவரலாயினர். அதாவது எப்படிக் கிருத்தவமிஷனரிமார் பாடசாலைகளில் சைவசமயத்தாரைச் சேர்த்து, சைவசமயத்தாரிடம் தம்மதம் சார்ந்த நல்லெண்ணத்தைப் பெருக்கும் தந்திரத்தைக் கையாளுகின்றனரோ, அதுபோலவே இவர்களுமாகும். ஆனால், கிருத்தவர்கள் சைவாலயங்களில் குருமாராகவோ, சைவாலயங்களில் சொற்பொழிவாளராகவோ, சைவ நிறுவனங்களின் நிர்வாகிகளாகவோ, சைவசமயத்தவருக்கு வழிகாட்டுபவர்களாகவோ வரமுடியாது. கிருத்தவமதம் இசுலாமியமதம் முதலியவற்றை சைவத்துக்குப் புறச்சமயங்கள் என்று இனங்காணும் சைவசமயத்தார், சிவபரத்துவத்தை எள்ளளவும் ஏற்காத புறச்சமயத்தாராகிய சுமார்த்தமதத்தவரை யாரென்றே தெரியாது உழல்வது சைவப்பெருஞ்சமயத்திற்கு இழிவையே ஏற்படுத்தி நிற்கின்றது.
சுமார்த்தமதத்தார் உயிர்கள் உண்டு என்னும் கொள்கையை ஏற்றவர்கள் அன்று. சைவசமயத்தார் உயிர்கள் உண்டு என்னும் கொள்கை உடையவர். சுமார்த்தமதத்தார் தாமே பிரம்மம் என்பதால் தமக்கு மேலான தலைவனை ஏற்றவர்கள் அன்று. சைவசமயத்தார் தமக்கு அருள்பாலிக்கும் தலைவனாகிய சிவபெருமானை ஏற்றுக்கொண்டவர்கள். சுமார்த்தமதத்தார் பிரம்மம் மட்டுமே உண்டென்பதால் மாயை என்பதனை உள்பொருளாக ஏற்பதில்லை. ஆனால், சைவசமயத்தார் மாயை என்பதனைச் சடப்பொருளாகக் கொண்டு, அது சிவபெருமானின் வைப்புச்சத்தியென்று கூறி, அதிலிருந்தே உலகமெல்லாம் தோன்றி நின்று ஒடுங்குகின்றது என்று வலியுறுத்துகின்றவர்கள். சுமார்த்தமதத்தார் மனுஸ்மிருதி முதலியவற்றைத் தலையாய தர்மநூல்களாக ஏற்பவர்கள். சைவசமயத்தாரின் சந்தானகுரவராகிய அருணந்தி சிவாசாரியப்பெருமான் ”மிருதிவழி உழன்றும்” என்று உயிர்களை உழலச்செய்வதே இந்த ஸ்மிருதிகள் என்று சுட்டியுணர்த்துகின்றார். சுமார்த்தமதத்தாருக்கு வேதம் இயற்கையாக இருப்பது, அதாவது யாராலும் தோற்றுவிக்கப்படாததாகும். ஆனால் சைவருக்கு வேத சிவாகமங்களும் பன்னிருதிருமுறை பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களும் முனிவர், குரவர்களை அதிட்டித்து சிவபெருமான் அருளியவை என்பதாகும். சுமார்த்தமதத்தார் வேதமே பரமபிரமாணம் என்பர்; ஆகமங்களை ஏற்பதில்லை. ஆனால் சைவசமயத்தாருக்கு வேதம் பொதுநூல்;அபரவாக்கியம், சிவாகமங்களே சிறப்புநூல்;பரவாக்கியம். அச்சிவாகமங்களின் ஞானகாண்டமே திருமுறையும் மெய்கண்ட சாத்திரமுமாகும். அபரவாக்கியத்தால் முத்தியில்லை.பரவாக்கியத்தினாலேயே முத்தி உண்டு என்பது காமிக ஆகமவசனம். சுமார்த்தமதத்தார் மந்திரங்களுக்கு தேவதைகள் கட்டுப்பட்டது என்றும், மந்திரம் (சுமார்த்த)பிராமணருக்கு கட்டுப்பட்டதென்றும் கூறுவர். ஆனால், தக்கன் வேள்வியையும் தாருகாவனத்து முனிவர் வேள்வியையும் அழித்து சிவபரத்துவம் இல்லாத அனைத்தும் சவமே என்று சாதித்து, சிவபத்தியில்லாது செய்வதெதுவும் எதனையும் சாதிக்காதென்று நிறுவிய சமயம். அதாவது, சுமார்த்தமதத்தார் சப்தப்பிரம்மவாதத்தை ஏற்றவர். சப்தமே பலன் தரும் என்பர். ஆனால், சைவசமயத்தார் கடவுளே பயனை வழங்குவாரேயொழிய, சடமாகிய சப்த ஒலிகள் கடவுள் இல்லாவிட்டால் இயங்கவே முடியாதவொன்று என்று வலியுறுத்தும் சமயமாகும். சுமார்த்தமதத்தார் படைத்தல்,காத்தல்,அழித்தல் என்னும் மூன்று தொழில்களே உண்டென்பர். சைவசமயத்தார் படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில்கள் உண்டென்பர். சுமார்த்தமதத்தார் அழித்தல் உருத்திரனே சிவன் என்பர். சைவசமயத்தார் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பவற்றை பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவனைக் கொண்டுவித்துச் செய்வித்தும் தாமே நேரடியாகத் தேவையேற்படும்போது செய்தும், இத்தொழில்களுக்கெல்லாம் அப்பாற்பட்டும் விளங்கும் பெருங்கருணைக்கடவுளே சிவபெருமான் என்பர். அழித்தற் கடவுளே சிவன் என்று சுமார்த்தமதத்தார் கொள்வதனால், காத்தல் தொழில் செய்யும் திருமாலே மங்கலத்தெய்வம் என்று வலியுறுத்தி, ”நாராயண ஸ்மிருதி” என்றே எதனையும் எழுதிக்கொள்வர். சைவசமயத்தவருக்கு செம்பொருள்,மங்கலப்பொருள் யாவும் சிவபெருமானேயாகும். சுமார்த்தமதத்தார் ”நீலலோகிதன்” என்னும் உருத்திரநாமத்தையே சிவமாகக் கொள்வதனால், சிவபெருமானை நீலநிறத்தில் பேணுவதில் உடன்பாடுடையவர். சைவசமயத்தார் செந்தழல் வடிவாகச் சிவந்தமேனியனாகப் பொன்னார்மேனியன் என்று சுந்தரமூர்த்திநாயனார் முதலியோர் போற்றிய நிறத்தில் வழிபடுவதனையே கடனாய் உடையவர். சைவவேதியர் ஓம் என்னும் பிரணவத்தினாலேயே வைதிக அனுட்டானம் செய்வர். சுமார்த்தமதத்தார் அச்சுதாய,கோவிந்தாய என்று அனுட்டானம் செய்வர். அதாவது சைவவேதியரின் வைதிக அனுட்டானம் சிவபரத்துவமானது. சுமார்த்தமத புரோகிதரின் வைதிக அனுட்டானம் சிவபரத்துவம் அற்றதென்பதோடு, திருமாலையே மங்கலக்கடவுள் என்று ஏற்று, சிவபரத்துவம் அற்றுச் சிவபாதகமாகச் செய்யும் அனுட்டானமாகும். சுமார்த்தமதத்தார் திருநீறுக்குச் சிவசம்பந்தம் இல்லை என்றும், அது வேதவழக்கென்றும் கூறுவர். சைவசமயத்தார் திருநீறு சிவசின்னம் என்று கொள்வர். சைவசமயத்தார் ஓம் என்றோதியே வேதம் ஓதி முடிப்பர். சுமார்த்தமதத்தார் ஹரிஓம் என்றே வேதம் ஓதி முடிப்பர்.( இன்று இலங்கைச் சிவாலயங்கள் உட்பட சைவாலயங்கள் யாவற்றிலும் சுமார்த்தமத வழக்கே உண்டு).
இப்படிப்பட்ட பிறிதொருமதத்தாராகிய சுமார்த்தமதத்தார், சைவர்களைத் தமது விருப்பத்திற்கு
ஏற்ப வழிநடத்தக்கூடியதாகவும் தம்மதக்கொள்கைகளைச் சைவசமயக் கொள்கைகளாகவும் விதிகளாகவும் திணிப்பதற்குச் சாத்தியமாகவும் இருப்பதற்குக் காரணம், இந்துமதம் என்னும் பெயரில் தம்பெயரை மறைத்து தம்மதத்தின் உட்பிரிவே சைவாதி சமயங்கள் என்று திரித்தும் நிற்பதினாலாகும்.
சுமார்த்தமதத்தார் சைவாலயங்களின் கொடிமரத்தைத் தாண்டக்கூடாதென்பது சைவாகம விதியாகும்.ஆனால், சுமார்த்தமதத்தார் (காஞ்சி சிருங்கேரி முதலிய சங்கராசாரிய பீடங்களும் அப்பீடங்களை ஏற்றொழுகும் பிராமணர்களும் அக்கொள்கையைத் தழுவி நிற்கும் இந்துத்துவ அமைப்புக்களும்) யாரென்பதில் சைவசமயத்தாருக்குத் தெளிவில்லாததினால், இக்காலத்தில் சைவாகமப்பாடசாலைகளையே ஒருசில விலைபோன சிவாசாரியரைக் கொண்டு நடத்துவித்து, அப்பாடசாலைகளில் தமது அச்சுதாய கோவிந்தாய அனுட்டானமுறைகளையும் ஹரிஓம் என்றே வேதமோதி முடிக்கும் வழக்கையும் இன்னும் பிறவகையான தம்மதக் கொள்கைகளையும் சைவாலய அந்தணரிடம் புகுத்திவருதல் பெருத்து நிற்பது கண்கூடு.சுமார்த்தமதத்தார் திருநீறு அணியும்போதும் திருநீறுக்கு சிவசம்பந்தம் கற்பிப்பதில்லை. ஆனால் சைவசமயத்தார் திருநீறு சிவசின்னம் என்று போற்றும் நெறியினர். எனினும் இவ்வுண்மையெல்லாம் சாதாரண சைவசமயிகளுக்குத் தெரியாதென்பதினால், சுமார்த்தமதத்தாரையும் திருநீறுதாரணர் என்பதால் சைவரென்றே எண்ணிச் சைவசமயத்தார் மயங்குகின்றனர். இதுவே அம்மதத்தாருக்கும் சைவசமயத்தினுள் ஊடுருவிச் சைவசமயக் கொள்கைகளைத் திரிக்கச் சாதகமாக விளங்கிவருதல் கண்கூடு. இவ்வாறான இடர்மிகுந்து நிற்கும் காலத்தில், ஏற்கனவே இலங்கையில் அந்தணர் பாரம்பரியம் சுமார்த்தமத மயப்படுத்தப்பட்டு நிற்கும் இழிநிலை பெருத்து நிற்கும் இக்காலத்தில், இலங்கை அரசாங்கத்தினாலேயே சுமார்த்தமத பீடத்தில் சைவாலயப் பயிற்சி பெறுவதற்கு இலங்கை சைவாலய அந்தணர் செல்வதென்பது பெரும் கேட்டையே சைவத்தமிழ்ப் பண்பாட்டில் ஏற்படுத்தும் என்பதனை நன்றே உணர்ந்து, அகில இலங்கை இந்து மாமன்றப் பேரவைக்கூட்டத்தில் கலந்து கொண்டு இம்மதத்திற்கும் சைவசமயத்திற்கும் உரிய வேறுபாடுகளை எடுத்து விளக்கியதோடு, சுமார்த்தமத ஆச்சாரியராகிய சந்திரசேகர சரஸ்வதியார் எழுதிய தெய்வத்தின் குரலில் தாங்கள் சைவசமயத்தார் அன்று அவர் தெளிவாகக் கூறியிருக்கும் வாசகம் முதலியவற்றையும் எடுத்துக்காட்டி, கழகத் தலைவர் சைவத்திரு.கி.பிரதாபன் அவர்கள் சைவப்பெருமக்களிடம் தெளிவை ஏற்படுத்தினார். அகில இலங்கை இந்து மாமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மாமன்ற ஆலோசகராகிய அச்சுவேலிக்குமாரசுவாமிக் குருக்களின் பூட்டனார் சிவத்திரு.கு.வை.கா.வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் சைவத்திரு.மரு.கி.பிரதாபன் அவர்கள் எடுத்துக்கூறிய கருத்துக்களை வழிமொழிந்து ஏற்றுக்கொண்டதும் அகில இலங்கை இந்து மாமன்றம் பிரதமர் இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை உத்தியோகபூர்வமாக அறிவித்தால் மறுப்பைத் தெரிவிப்போம் என்றனர்.
எனினும் இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் பூர்த்தியாகும் முன்னரே இதனைத் தடுத்து நிறுத்துவதும், தருமபுரம் திருவாவடுதுறை ஆதீன சிவாசாரிய குருகுலங்களிலும் பிள்ளையார்பட்டி குருக்குலத்திலும் சைவாலய அந்தணர் கல்வியைப் பெறுவதே சைவாகமமரபுக்கு ஏற்புடையதென்று பிரதமருக்கு உணர்த்துவதும் கடன் என்று உணர்ந்து, 17 – 05 – 2015ஆம் நாள் ஞாயிறு வீரகேசரிப் பத்திரிக்கையில் இதுகுறித்த விளக்கக்கண்டனச் செய்தியை கழகம் வெளியிட்டது. இலங்கையில் இருந்து இதனைக் கண்டித்து சைவாகம விதிமுறைகளை எடுத்து விளக்கிய ஒரே அமைப்பு, சைவ சமூகத் திருப்பணிக் கழகம் (இலங்கை சைவநெறிக் கழகம்) என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனையோ பாரம்பரிய அமைப்புக்கள் எல்லாம் இருந்தும் அவையெல்லாம் அமைதியாக இருக்கும் நிலையென்பது உண்மையில் சைவப்பெருஞ்சமயத்தினரின் தவக்குறைவேயாகும். எனினும்,
ஒருசில இந்துத்துவ சுமார்த்தமத தரகர்களின் சூழ்ச்சியினால் பிரதமர் திரு.இரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்பில் முன்னெடுக்கப்படவிருந்த இச்செயற்திட்டம் திருவருளால் நிறுத்தப்பட்டது.