இடபக்கொடியினை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமே தவிர்க்கவேண்டிய இடர் – கழகம் வெளியிட்ட எதிர்ப்பு!

இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட “திருமுறையும் சைவத்திருநெறியும்” என்கின்ற சைவத்திருமுறை மாநாட்டில் இடபக்கொடிகளினால் வீதிகளும் விழா மண்டபமும் அலங்கரிக்கப்படுவது தவிர்க்கப்பட்டிருந்தது. இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு.டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் இந்து ஸ்வயம் சேவா சங்கம் முதலியவற்றின் ஆலோசனையினை ஏற்று அந்த அமைப்பின் இலங்கைக்குரிய கௌரவத்தலைவர் முதலிய பதவிகளில் இருந்தமையினால், இடபக்கொடியினை பயன்படுத்துவதில் அவருக்கு நாட்டம் இருக்கவில்லை. இடபக்கொடிக்குப் பதிலாக காவிக்கொடியினையே தூக்கிப்பிடிக்கும் செயலுக்கு துணை நிற்கலாயினார். இச்சந்தர்ப்பத்தில் நடந்த இவ்விழாவில், அமைச்சரின் மனதிற்கு இதமாக நடக்கவிரும்பி, இடபக்கொடிப் பாவனையினை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் தவிர்த்திருந்தது.

இடபக்கொடிப்பாவனையினை (நந்திக்கொடி) இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தவிர்க்கவேண்டியிருப்பதினை சைவமக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதினை அமைச்சருக்கும் திணைக்களத்திற்கும் உணர்த்தவேண்டி, ஊடகங்களில் கண்டனச்செய்தி 10-05-2010ம் நாளன்று வீரகேசரிப் பத்திரிக்கையில் வெளியிட்டப்பட்டது.

விடைக்கொடிச்செல்வர் சைவத்திரு.சின்னத்துரை தனபாலா பெருமகனார் இடபக்கொடியைப் புறக்கணித்தது கண்டு வருந்தி, சைவசமயத்தாரே சைவக்கொடியைப் புறக்கணித்தால் எவர் முன்வந்து சைவக்கொடியை வளர்த்தெடுப்பர் என்று வேதனையோடு இலங்கை சைவநெறிக் கழகத்தினரிடம்
(சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தினரிடம்) கூறினார். தமிழரின் சமயப் பாரம்பரியமான சைவக்கொடியாகிய இடபக்கொடியை உலகம் முழுதும் உள்ள சைவப்பெருமக்களிடம் கொண்டுசெல்வதற்குத் தம்மையே அர்ப்பணித்துப் பணியாற்றிக்கொண்டிருக்கும் விடைக்கொடிச்செல்வர் மனம் நொந்து நிற்பது கண்டு, இலங்கைச் சைவப்பெருமக்கள் சார்பில் இந்துசமய கலாசார திணைக்களத்திற்கும் இந்துசமய கலாசார அமைச்சுக்கும் இலங்கையில் தமிழர் பண்பாடு சைவப்பண்பாடேயென்பதனை உணர்த்தும்பொருட்டு, இக்கண்டனச் செய்தி வெளியிடப்பட்டது.

comments