சைவத்திரு.மு.கதிர்காமநாதன் பெருமகனார் சிவபதம் பெற்றபோது திருமுறை ஓதி வழிபட்ட கழகத்தார்

இலங்கை சைவநெறிக் கழகம் முதன்முதலில் சைவ சமூகத் திருப்பணிக் கழகம் என்னும் பெயரில் 30-06- 2013ஆம் நாளன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ஒன்றுகூடிய பொதுக்கூட்டத்தினூடாகத் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பைத் தோற்றுவிக்கவேண்டும் என்று சிந்தித்த சைவத்திரு.மரு.கி.பிரதாபன், சைவத்திரு.வி.துலாஞ்சனன்,சைவத்திரு.கோ.இளையராஜா,சைவத்திரு.சி.வினோதரூபன் முதலியோர் விடைக்கொடிச்செல்வர் சைவத்திரு.சின்னத்துரை தனபாலா பெருமகனாரை நாடி, தோற்றுவிக்கப்படும் சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின் கொள்கைகளை எடுத்துவிளக்கியதோடு, சைவசமயக் கற்புநெறியில் தமிழரை ஆற்றுப்படுத்துவதற்குரிய அமைப்பாகச் சைவ சமூகத் திருப்பணிக் கழகம் விளங்கும் என்று உறுதிகூறியதும், விடைக்கொடிச்செல்வர் பெரும் மகிழ்ச்சியுற்றார். சைவசமயத்திற்கும் சுமார்த்தமதத்திற்கும் உரிய வேறுபாடுகளை எடுத்து விளக்கி, இன்று இந்துமதம் என்னும் பெயரில் சுமார்த்தமதமே இந்துமதமாகச் சைவசமயத்தாரிடம் வளர்க்கப்பட்டுவருகின்றதென்று விளக்கியபோது, இவற்றையெல்லாம் சைவப்பெருமக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய அவசியத்தை விடைக்கொடிச்செல்வர் வலியுறுத்தினார். தோற்றுவிக்கப்படும் அமைப்புக்குக் காப்பாளராக அவர் இருந்து பணியாற்றவேண்டும் என்று அமைப்புக்குழுவினர் ஒருமனதாக அவரிடம் விண்ணபித்தபோது, விடைக்கொடிச்செல்வர் ”அது தமக்குக் கிடைத்த பயன்” என்று பணிவோடு மகிழ்ந்து ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாது, சைவத்திரு.கலாநிதி மு.கதிர்காமநாதன் பெருமகனாரைச் சந்திக்குமாறு வேண்டிக்கொண்டார். விடைக்கொடிச்செல்வரின் பணிப்பில் சைவத்திரு.மு.கதிர்காமநாதன் பெருமகனாரைச் சந்தித்தபோது, அவர் கழகக் கொள்கைகளையெல்லாம் கேட்டறிந்து மகிழ்ச்சியுற்றதோடு, இக்காலத்தில் இவற்றை ஆணித்தரமாக மக்களிடம் எடுத்து விளக்குதல் வேண்டும் என்று வலியுறுத்தினார். பொதுக்கூட்டத்தை எங்கு ஏற்பாடு செய்யவுள்ளீர்கள் என்று கேட்டார். அப்போது, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் என்று கூறியதும், கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவராக விளங்கியதினால் தாமே விநோதன் மண்டபத்திற்குரிய பணத்தைச் செலுத்தி மண்டபத்தை 30- 06 – 2013ஆம் நாளன்று மாலை எமது கழகப் பொதுக்கூட்டத்திற்கென்று ஒதுக்கித் தந்தார்.

அத்தோடு மட்டுமல்லாது, அகில இலங்கை இந்து மாமன்றத்தில் பதியவேண்டும் என்று வலியுறுத்தியதோடு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவதற்குரிய வழிமுறைகளையும் எடுத்து விளக்கினார்.
அகில இலங்கை இந்து மாமன்றம் முதன் முதலில் தொடங்கப்பட்டபோது அகில இலங்கை சிவநெறி மாமன்றம் என்றே தொடங்க முன்மொழியப்பட்டதாகவும், எனினும் ஒருசிலரின் அழுத்தத்தினால் அப்பெயரை அகில இலங்கை இந்து மாமன்றம் என்று பெயரிட்டதாகவும் கூறியதோடு; சைவசமய ஆளுமையாளர்கள் அகில இலங்கை இந்து மாமன்றத்தில் செல்வாக்குப் பெற்றால் ஒருகாலத்தில் தமிழரின் சொத்தாகிய அகில இலங்கை இந்து மாமன்றத்தை அகில இலங்கை சைவசமய மாமன்றம் என்று பெயர் மாற்றஞ் செய்யமுடியும் என்றும் அறிவுறுத்தினார். தாம் அகில இலங்கை இந்து மாமன்றப் பொதுச்செயலாளராக இருக்கும்போதும், அமைப்பில் தற்போது பலரிடம் சுமார்த்தமதம் குறித்த விளக்கம் இல்லாததினால் இந்துமதம் என்னுஞ் சொற்பதத்தினால் நிகழும் இடர்கள் குறித்து விளக்கம் போதாதென்று மனம் நொந்துகொண்டதோடு, சைவசமய விழிப்புணர்வுடன் கூடிய இளைஞர்கள் அகில இலங்கை இந்து மாமன்றத்தில் அணிதிரண்டு சேரவேண்டும் என்று மனம்விட்டுக் கூறினார். அவருடைய கருத்துக்களையெல்லாம் செவிமடுத்து அவர்பால் அன்புகொண்டதோடு; விடைக்கொடிச்செல்வர் கேட்டுக்கொண்டவாறு அவருடன் இணைந்து காப்பாளர் பணியைப் பொறுப்பெடுக்கவேண்டும் என்று விண்ணப்பித்தபோது பணிவோடு மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

சைவசமயம் பீடுபெறவேண்டும் என்னும் சிந்தையோடு பல்வேறு வழிகளில் வழிகாட்டியாக விளங்கி, கழகத்தாரை வழிப்படுத்திக் கொண்டிருந்த கலாநிதி சைவத்திரு.மு.கதிர்காமநாதன் பெருமகனார், 02- 02 -2016ஆம் நாள்
சிவபதம் பெற்றது சைவசமய விழிப்புணர்வினை சைவப்பெருமக்களிடம் ஏற்படுத்தவேண்டும் என்னும் சிந்தையோடு செயற்பட்டுக் கொண்டிருந்த எமது கழகத்திற்குப் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தியது. கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றப் பொதுச்செயலாளர், உலக சைவப் பேரவை இலங்கைக் கிளைச் செயலாளர்  என்று பல்வேறு வழிகளில் மக்கள் தொண்டாற்றிக்கொண்டிருந்த பெருமகனார், சிவபதம் பெற்றபோது கழகத்தார் பெருமகனார்பால் கொண்டிருந்த பத்தியின்பொருட்டு அவருடைய இல்லத்தில் திருமுறை ஓதி வழிபட்டனர்.

comments