சைவம் பேணுவாம் 2022-சிவகீதை நூல் அறிமுகவிழாவும் சிவநெறி அரங்கும்
தமிழ்நாட்டில் சித்தம் சிவமயம் ஞானதான அறக்கட்டளையினால் வெளியிடப்பட்ட சிவகீதை நூலினை இலங்கையில் அறிமுகம் செய்துவைக்கும் விழாவாகவும், சைவ விழிப்புணர்ச்சிச் சொற்பொழிவுகள் அடங்கிய சிவநெறி அரங்கு விழாவாகவும் சைவம் பேணுவோம் விழா, கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை 20 – 12 – 2022ஆம் நாளன்று இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டது.




சைவசமயத்திலும் கீதை என்னும் நூல் உண்டு என்பது குறித்த விழிப்புணர்வையும், ஏராளமான கீதைகள் உள்ளன என்பதனையும் சைவத்தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும் என்பதன்பொருட்டுத் தமிழ்நாட்டில் இருந்து, சிவகீதை நூல் இலங்கைக்குப் பெறப்பட்டு, அறிமுகவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. தென்னாடு ஐம்பூதநாதர் திருக்கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாட்டில் இணைந்து பங்கேற்றுப் பேருதவி புரிந்தனர். தமிழ்நாட்டுத் தருமைபுர ஆதீனத் தம்பிரான் தவத்திரு மீனாட்சி சுந்தரம் தம்பிரான் சுவாமிகள் இவ்விழாவிற்கு எழுந்தருளியிருந்தார். சைவத்திருமதி சித்தாந்தரத்தினம் செ.உதயகௌரி அவர்கள் சபையை வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.
குமாரவயலூர் திருமுறைக்கலாநிதி முனைவர் திருஞான பாலச்சந்திரன் ஓதுவார் பெருமகனார் திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சியை மிகச்சிறப்பாகவும் அருள்மழை பொலியுமாறும் அரங்கேற்றினார். ”சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்” என்னும் தலைப்பில், தருமபுர ஆதீனப் புலவர் திருமுறைக்களஞ்சியம் சிவத்திரு பிரபாகரமூர்த்தி பெருமகனாரவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். கழகப் பொதுச்செயலாளர் சைவத்திரு.வி.துலாஞ்சனன் அவர்களால் சமகாலத்தில் சைவசமயம் என்னும் தலைப்பில் அரங்களிக்கை நிகழ்த்தப்பட்டது. கழகத் தலைவர் ஈசானதேசிகர் மரு.கி.பிரதாபன் அவர்களால் சிவகீதை அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது. வர்ணாச்சிரம விதிகள் பல இந்நூலில் விளங்கினாலும், இலங்கைச் சைவநெறிக் கழகம் பின்பற்றும் ”கொள்ளத்தக்கனவற்றையும் தள்ளத்தக்கனவற்றையும் தீர்மானிக்கும் சாத்திரங்கள் சைவசித்தாந்த சாத்திரங்களேயாகும்” என்னும் காமிகாகம வசனப்படி, திருமுறைநெறியினால் கொள்ளக்கூடியவற்றையே சிவகீதையில் சைவத்தமிழ் மரபினர் கொள்ளுதல் வேண்டும் என்றும், கீதை என்று பல நூல்கள் உண்டு என்பதனை உணர்த்துவதற்கும் சிவகீதை என்னும் நூல் கண்ணனின் கீதையிலும் பரமாகவுள்ளது என்பதனைச் சைவசமயத்தார் தெளியவேண்டும் என்னும்பொருட்டும் சிவகீதை நூலினை அறிமுகஞ் செய்துவைப்பதனைப் பெறும்கடனாக, இலங்கைச் சைவநெறிக் கழகம் உணர்ந்து இவ்விழாவை ஏற்பாடு செய்ததென்று கழகத் தலைவர் விளக்கியுரையாற்றினார். நன்றியுரையைக் கழகத்தின் பிரதிச் செயலாளர் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்கள் நிகழ்த்தினார். அரங்கம் நிறைந்த சைவ அன்பர் குழாத்தினருடன் சிறப்புற சைவம் பேணுவாம் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.
