புத்தளம் பெரியசந்திக்கிராம ஐயனார் ஆலயத்திற்கு பஞ்சலோக சிவலிங்கமூர்த்தம் வழங்கல்

புத்தளம் பள்ளிவாசற்துறை பெரியசந்திக்கிராமத்திலுள்ள ஐயனார் ஆலயத்தில் சிவராத்திரி முதலிய வழிபாடுகளுக்கு சிவமூர்த்தம் இன்மையைச் சுட்டிக்காட்டி, அருகில் சிவவழிபாட்டுக்குரிய கோயில்கள் இன்மையையும் சுட்டிக்காட்டி, இலங்கை சைவநெறிக் கழகத்திடம் "சிவலிங்கம்" பெற்றுத்தருமாறு வேண்டுதற்கடிதம் ஊர்மக்களின் சார்பில் கோயில் நிர்வாகசபையினரால் அளிக்கப்பட்டிருந்தது. இக்கிராமம், புறச்சமயத்தார் பெரும்பான்மையாகவுள்ள இடத்திலிருக்கும் ஒரு சைவக்கிராமம் என்பதால், இக்கிராம மக்களின் வேண்டுகோளினை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு இலங்கை சைவநெறிக் கழகத்தால் சீர்தூக்கிப் பார்க்கப்பட்டு, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையைப் பெற்று, அவர்களின் வேண்டுதலை பூர்த்திசெய்யும் பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டது.

ஐயனார் ஆலயம் அன்புமார்க்க வழிபாட்டுக் கோயிலாக இருப்பதால், ஆகமப்பிரமாணங்களை பயன்படுத்தமுடியாதென்ற சால்பிற்கு அமைவாக, பஞ்சலோக சிவலிங்கத்தினை, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையுடன் பெற்று, பெரியசந்திக் கிராமமக்களின் வழிபாட்டிற்காக, அங்குள்ள ஐயனார் கோயிலிற்கு (2019-07-05) வழங்கப்பட்டது.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவர் திரு.முத்துக்குமாரசுவாமி அவர்களை அழைத்துக்கொண்டு, இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்கள், பிரதித் தலைவர் திரு.சி.வினோதரூபன், பிரதித் தலைவர் சித்தாந்தரத்தினம் செல்வி.செ.உதயகௌரி ஆகியோர் நேரடியாக புத்தளம் பள்ளிவாசல்துறை,பெரியசந்திக் கிராமம் ஐயனார் ஆலயத்திற்கு பயணம்செய்து, பஞ்சலோக சிவலிங்கத்தினை அவ்வாலய நிர்வாகசபையினரிடம் கையளித்தனர்.

சைவவழிபாடுகள் அவ்விடத்திற் மேலும் வலுப்பெற இப்பணி ஏதுவாக அமையுமென்ற நிதர்சனத்திற்கு அமைவாக, கழகத்தின் பிரதித் தலைவர் சித்தாந்தரத்தினம் செல்வி செ.உதயகௌரி அவர்களால் செவ்வனே திட்டமிடப்பட்டு, மேற்பார்வை செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.