மன்னார் சைவவிழாவிற்கு நிதியுதவியும்-சிறப்புரை வழங்கலும்
மன்னார் சைவவிழாவிற்கு நிதியுதவியும்-சிறப்புரை வழங்கலும்
மன்னார்-திருக்கேதீச்சுவரத்தில் அமைந்துள்ள மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையினால் 11-07- 2019ம் நாள் நடத்தப்பட்ட சைவவிழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சிவத்திரு.மரு.திரு.கி.பிரதாபன் ஈசான தேசிகர் அவர்கள், சைவநெறி சாருதல் தவப்பயனின் விளைவு என்னும் கருப்பொருளில் சிறப்புரையும் ஆற்றினார்கள். சைவசமயத்தார் ஆபிரமாகிய மதங்களின் போலிப்பிரச்சாரங்களுக்குள்ளும் அழுத்தங்களுக்கும் உள்ளாகி மதம் மாறுவதற்கு, இந்துவென்ற பெயரில் சைவசமயத்தாரிடம் ஊடுருவி நிற்கும் ''அனைத்தும் ஒன்றுதான்'' என்னும் உளவியல் உறுதியின்மையே காரணம் என்றும், ''அனைத்தும் ஒன்றுதான் என்று சிவபெருமானும் சனைச்சரனும் வியாழனும் கேதுவும் ஒன்றுதான்'' என்று முடிக்கும் சுமார்த்தமத இந்துத்துவ வாதமே இந்துவாக இன்று தாபிக்கப்பட்டு நிற்கின்றதென்றும், இதன் நீட்சியே சிவபெருமானும் இயேசுவும் ஒன்றென்று நம்மவர் இழிந்து நிற்பதற்கு ஏதுவாகியுள்ளதென்றும், புறச்சமயங்களை வெல்வதற்கு சைவசமய உண்மைகளை நாயன்மார் வழியில் உறுதியோடு ஒழுகுவதே பயனளிக்கும் என்றும், அவ்வழியில் நின்றே நாவலர்பெருமான், காசிவாசி செந்திநாதையர் பெருமான், மாயாவாததும்சகோளரி கதிரைவேற்பிள்ளை பெருமான், சிவசங்கரப்பண்டிதர் என்று பல பெரியவர்களும் நின்று ஆபிரகாமிய அடிப்படைவாதங்களை ஒடுக்கி சைவசமயத்தைத் தாபித்து நின்றனர் என்றும் கழகத் தலைவர் சுட்டிக்காட்டி, மன்னாரில் சைவசமய மறுமலர்ச்சிக்கும் எழுச்சிக்கும் இலங்கை சைவநெறிக் கழகம் உறுதுணையாக விளங்கும் என்று தமதுரையில் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கை சைவநெறிக் கழகத்தின் கழகத்தின் ஆலோசகர் கனடா நாட்டு சைவத்திரு.கண்ணப்பன் அவர்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தின் சார்பில் வழங்கிய 20,000 ரூபாயினை மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையினருக்கு கையளித்தார்கள்.