| | | | |

தலைநகரில் யானை மீது எழுந்தருளிய சைவத்திருமுறைகளும் மெய்கண்டசாத்திரங்களும்!

தலைநகரில் யானை மீது எழுந்தருளிய சைவத்திருமுறைகளும் மெய்கண்டசாத்திரங்களும்! – இலங்கை சைவநெறிக் கழகத்தின் “சைவம் போற்றுதும்” நிகழ்வில் பரவசம்.

இலங்கை சைவநெறிக் கழகத்தினரின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற “சைவம் போற்றுதும்” விழாவானது பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் கடந்த 2023.12.10 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகுசிறப்பாக இடம்பெற்று முடிந்தது. “தத்துவத்தையும் பண்பாட்டையும் இலக்கியத்தோடு இணைத்து சிவத்தமிழ் பருகும் திருவிழா” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ்விழா, பம்பலப்பிட்டி சம்மாங்கோடு மாணிக்கப்பிள்ளையார் கோவிலில், சைவசமய மரபில் சைவசமயப் பதிநூல்கள் சிவபெருமானின் திருமூர்த்தமாகப் பாவிப்பதினால் பன்னிருதிருமுறைகளுக்கும் பதினான்கு மெய்கண்டசாத்திரங்களுக்கும் பூசைகள் செய்யப்பட்டு, இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொருளாளர் சைவத்திரு.கோ.இளையராஜா பன்னிருதிருமுறைகளினையும் பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களினையும் தம் தலையிற் சுமந்தவாறு யானைமேல் ஏறி, மங்கல வாத்தியங்கள் முழங்க பன்னிருதிருமுறை ஓதிவர,  நகர்வலம் வந்து பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தினை அடைந்து, அங்கு திருப்பல்லாண்டு ஓதப்பட்டு, சிவத்திரு. கிருஷ்ண ஜனேந்திரக்குருக்களால் திருமுறைகளுக்கும் மெய்கண்டசாத்திரங்களுக்கும் சிவகாமி உடனாய கூத்தப்பெருமானுக்கும் சிவபூசை செய்யப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களால் கொடிக்கவி பாடிட, சைவசமயக் கொடியான விடைக்கொடி சிவத்திரு.செ.முருகவேள் பெருமகனாரால் ஏற்றப்பட்டது. குரு, இலிங்கம், சங்கமம் (அடியவர்கள்) மூன்றிலும் சிவனைக் கண்டு வழிபடும் சைவர் மரபுப்படி, நிகழ்விற்கு எழுந்தருளியிருந்த தென்கயிலை ஆதீன குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் அருட்தவத்திரு அகத்தியர் அடிகளாருக்கு திருவடிப்பூசை கழகத் தலைவர் மரு. திரு. ஈசான கி.பிரதாப தேசிகரால் தீப வழிபாட்டுடன் செய்யப்பட்டது. திருமுறைக் கலாநிதி குமாரவயலூர் பாலச்சந்திரன் ஓதுவாமூர்த்திகளின் அவுஸ்ரேலியாவினைச் சேர்ந்த மாணவியர் சஷினி ரோஹன், ஈஷா ரோஹன் ஆகியோர் வழங்கிய திருமுறைப் பண்ணிசை முதலில் அரங்கேறியது. அம்மாணவியரின் பண்ணிசை நிகழ்வு பலரையும் மெய்மறக்கச் செய்து, திருமுறைத் தேனமுதாக விழாவுக்கு அருமையான பிள்ளையார் சுழியொன்றைப் போட்டது. இலங்கை சைவநெறிக் கழகத்தால் நடாத்தப்படும் சொய்சாப்புரம் மெய்கண்டார் அறநெறிப் பாடசாலையின் அதிபர். திருமதி. சிவசோபனா வினோதரூபன் அவர்கள்
வரவேற்புரையாற்றினார். திருவருளாசியுரையினை தென்கயிலை ஆதீன குருமகாசந்நிதானமும் சிவாசாரியக் குருவருளாசியுரையினை சிவத்திரு.கிருஷ்ண. ஜனேந்திரக் குருக்களும் நிகழ்த்தினார்கள். பரத கலாவித்தகர் திருமதி. தாருண்யா கார்த்தியின் நெறியாள்கையில் மோ.கிரிஷா, மோ.லக்‌ஷ்மிதா ஆகியோர் இனிய சிவசக்தி நடனமொன்றை வழங்கியிருந்தனர்.  அதேபோல், பரத கலாவித்தகர்  திருமதி. நிஜாந்தி சியாமளன் நெறியாள்கையில் மாணவியர் பலர் இணைந்து திருமுறைப்பாடல்களுக்குத் திருநடனம் புரிந்து, திருமுறைகளினைத் திருநடனத்தினூடாக சிறப்பித்தனர்.

மாணவர் அரங்கில் செல்வி ஜெயராஜ் சர்ஜனா, மூத்தோர் மனங்கள் வியக்குமாறு சைவ சமயச் சிறப்புகளைக் கூறி சிற்றுரை ஆற்றினார். ந.கவிஷால், ந.கிரிஷால் ஆகியோர் சமயம் தொடர்பான எளிமையான சந்தேகங்களை கற்றோரும் தெளியும் வண்ணம், “ஐயம் தெளிதல்” உரையாடலை நிகழ்த்தினர். முத்தாய்ப்பாக, லோஹிஸ் கணாத்ரா, லோஹிஸ் திரீஷ்மர் ஆகியோர் நாவலரின் வரலாற்றினைக் கதாப்பிரசங்கமாக நிகழ்த்தினர்.

இவ்விழாவில் அருமையான பல உரைகளும் மேடையேறின. “அரன் கழல் செலுமே” எனும் தலைப்பில் உரையாற்றிய சைவத்திரு.சித்தாந்தரத்தினம், திருமுறைநெறிச் செல்வர், சைவப்புலவர் கார்த்திகைக்குமரன் சரவணமுத்து அவர்கள், சிறுவர்களுக்கும் புரியும் படி எளிமையான விதத்தில் உரையாற்றியிருந்தார். விழாவின் சிவநேய விருந்தினர் சைவ அறிஞர் சிவத்திரு. செயச்சந்திரன் முருகவேள் பெருமகனாரின் “சைவ ஆகமங்களில் வித்யாபாதம்” எனும் உரை, ஆழமான மெய்யியல் – தர்க்க ஆராய்ச்சிகளுடன் அவையோரின் சிந்தனைக்கு விருந்தாக அமைந்தது. நிகழ்வில் கலந்துகொண்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. சாந்தி கேசவன் அம்மையார், சமகால சமூக – அரசியல் துறையில் பரவலாகப் பேசப்படும் “அப்பர் தேவாரங்களில் இராவணன்” எனும் சுவையான தலைப்பில் பேச்சொன்றை நிகழ்த்தியிருந்தார். கழகத் தலைவர் ஆற்றிய தொகுப்புரையானது, இலங்கை சைவநெறிக் கழகத்தின் பத்தாண்டுப் பயணம், அதில் கழகத்தின் சாதனைகள், குறைந்த ஆளணியுடன் கழகம் ஆற்றும் பெரும்பணிகள், கழகம் முன்வைக்கும் நோக்கத்தின் எதிர்காலத்தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை  ஆராய்ந்த சுருக்கமான உரையாக அமைந்தது. தென்னாடு செந்தமிழாகம மடத்தின் முதல்வர் சிவத்திரு.தென்னவன் பார்த்தீபனார் சைவமக்கள் சைவசமயப்பணி செய்வோரினை உவந்துகொண்டாடுதல் வேண்டும் என்னும் பொருளில் வாழ்த்துரை நிகழ்த்தினார்.

சைவம் போற்றுதும் நிகழ்வில் மேடையேறிய இன்னும் இரு நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று, மட்டக்களப்பு பருத்திச்சேனை கலைமகள் கலைக்கழகத்தினர் நடாத்திய “மார்க்கண்டேயர்” தென்மோடிக் கூத்து. மறைந்துவரும் ஈழத்து நாட்டார் கலையாடல்கள் மீதான தன் கரிசனையை இக்கூத்து அரங்கேற்றம் மூலம் இலங்கை சைவநெறிக் கழகம் சுட்டிக்காட்டியிருந்ததுடன், பாரம்பரிய மரபுப்படி ஆடப்பட்ட தென்மோடிக் கூத்து சபையோரால் பரவலாக பாராட்டப்பட்டது. அடுத்த நிகழ்வு “சேக்கிழார்” வில்லிசை. கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் பீட மாணவன் சிவத்திரு. வாமதேவ சிவசதீபன் நெறியாள்கையில் “மதுரகவி” குழுவினரால் நிகழ்த்தப்பட்ட  வில்லுப்பாடலில், சேக்கிழாரின் வரலாற்றில் ஆரம்பித்து இலங்கை சைவநெறிக் கழகத்தின் சமய- சமூகப்பணிகளில் நிறைவுற்ற இலாவகம், பார்வையாளர்களின் பலத்த கைதட்டலைப் பெற்றிருந்தது.

இவ்விழாவில் யாழ்ப்பாணத்தில் சைவப்பணி ஆற்றும் அகில இலங்கை சைவமகா சபையின் செயலாளர் மரு. பரா.நந்தகுமாருக்கு “சைவநெறிச் செல்வர்” விருதும், மட்டக்களப்பில் சைவப்பணி ஆற்றும் அகில இலங்கை சைவப்புலவர் சங்க உபதலைவர் திருமதி. சிவானந்தஜோதி ஞானசூரியம் அம்மையாருக்கு “சைவநெறிச் சுடர்” விருதும் வழங்கப்பட்டன. இவர்களுக்கான கௌரவத்தினை விடைக்கொடிச் செல்வர் சின்னத்துரை தனபாலா ஐயாவும் கழகத்தின் முன்னாள் காப்பாளர்  தெய்வத்திரு.கதிர்காமநாதனின் துணைவியார் திருமதி. பரமேஸ்வரி கதிர்காமநாதன் அம்மையாரும் வழங்கிவைத்தனர்.




சைவம் போற்றுதும் விழாவில் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. இலங்கை சைவநெறிக் கழகம் தமிழ்நாடு புனிதர் பேரவையோடு இணைந்து வெளியிட்ட “இரௌரவ ஆகமம் வித்யாபாதம்” அவற்றுள் முதலாவது நூல். அது இருபத்தெட்டு சிவாகமங்களுள் ஒன்றான ரௌரவ ஆகமத்தின் சைவ மெய்யியலைச் சொல்லும் வித்யாபாதத்திற்கு சைவ அறிஞர் சிவத்திரு.செ.முருகவேள் பெருமகனார் எழுதிய தமிழ் உரை விளக்கத்துடன் வடமொழி மூலத்தையும் கொண்டிருந்தது. சிவாசாரியார்களுக்கும் சைவ சமூகத்துக்கும் அது முக்கியமான ஒரு நூல்.

இரண்டாவது நூல், “சைவம் போற்றுதும் -2023 விழா மலர்”. இலங்கை சைவநெறிக் கழகத்தின் முதலாவது சைவம் போற்றுதும் விழா இடம்பெற்ற 2018இல் விழாவின் பெயரிலேயே முதலாவது விழாமலர் வெளியாகியிருந்தது. 2023இல் தற்போது இடம்பெற்ற சைவம் போற்றுதும் இரண்டாவது விழாவிலும் விழாமலர் விழாவின் பெயரில் வெளியிடப்பட்டது. கழகத்தலைவர் மரு. திரு.கி.ஈசான பிரதாப தேசிகரால் எழுதித் தொகுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட இம்மலர், சமகால இந்தியச் சமய உரையாடல்களில்  விரிவாகப் பேசப்படும், “சைவம் – சுமார்த்தம்” ஆகிய இரு மரபுகளின் தனித்துவங்களைச் சுட்டிக்காட்டி எழுதப்பட்டுள்ள அருமையான நூலாகும்.விழாவுக்குச் சமாந்தரமாக பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான சைவசமய பொது அறிவுத் தேர்வும் விழாவின்போது சரசுவதி மண்டபத்தின் பிறிதொரு பகுதியில் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன. சைவசமயப் பொது அறிவுப் பரீட்சைகளினை திருமதி சசிமா இரவிக்குமார், திருமதி நாகேஸ்வரி சங்கரநாராயண ஐயர், திருமதி மெ.செல்வரத்தினம், திருமதி  ரஜினி தேவராஜன் ஆகியோர் நெறிப்படுத்தினர். இந்நிகழ்வில் ஏராளமான சைவ அறிஞர்கள், சைவப்பெரியார்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தனர். திருவருள் முன்னிலையாக தென்கயிலை ஆதீன குருமகாசந்நிதானமும், சிவாசாரியக் குருவருள் விருந்தினராக யாழ். நல்லூர் சிவாகம பீடத்தின் தலைவர் சிவத்திரு. கிருஷ்ண ஜனேந்திரக் குருக்களும் கலந்துகொண்டிருந்தனர். சிவநேய விருந்தினராக தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி புனிதர் பேரவையின் தலைவரும் “சுத்தசைவம்” நூலாசிரியருமான சிவத்திரு. முருகவேள் செயச்சந்திரன் பெருமகனார் வருகை தந்திருந்தார். மாண்புறு விருந்தினர்களாக திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் பிரதித் தலைவர் திருமதி. அபிராமி கயிலாசபிள்ளை அம்மையாரும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட இந்து நாகரிகத் துறையின் மேனாள் தலைவர்  கலாநிதி. சாந்தி கேசவன் அம்மையாரும் சிறப்பித்திருந்தனர்.  பீடுடை விருந்தினர்களாக வெள்ளவத்தை நித்யகல்யாணி ஜூவலர்ஸ்  அதிபர் திரு.அ.பி.ஜெயராஜா, வீரகேசரி பிரதம ஆசிரியர் திரு.ச.ஸ்ரீகஜன், செட்டித்தெரு பூபாலசிங்கம் புத்தகசாலை நிர்வாக அதிபர் திரு.இ.பூ.ஸ்ரீதரசிங் ஆகியோரும், திருச்சால்புடை விருந்தினர்களாக ஓய்வுநிலை நீதிபதி திரு. ஜெ.விஸ்வநாதன், தென்னாடு செந்தமிழாகம சிவமட முதல்வர் திரு.கு.பார்த்தீபன் ஆகியோரும் கலந்துகொண்டு மகிழ்வித்திருந்தனர்.






























சைவம் போற்றுதும் நிகழ்வுக்கு வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜூவலர்ஸ் முதன்மை அனுசரணை வழங்க, சிவன் தொலைக்காட்சி மற்றும் வானொலியினர்  கொழும்பு 13 அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில் அறங்காவலர் திரு. கனக. ரகுநாதன் குடும்பத்தினர், திரு.வ.மனோகாந்தன் குடும்பத்தினர் (கனடா), திரு. ரோஹன் குடும்பத்தினர் (அவுஸ்திரேலியா) ஆகியோர் அனுசரணையும் வழங்கியிருந்தனர். வீரகேசரி பத்திரிக்கை ஊடக அனுசரணை வழங்கியிருந்தது.

கழக உபதலைவர் திரு,சி.வினோதரூபன், பிரதித்தலைவர். சைவப்புலவர் திருமதி. செ.உதயகௌரி, கழக உறுப்பினர்கள் திருமதி. சிந்தனா பிரதாபன் மற்றும் திருமதி. புளோரிடா இளையராஜா ஆகியோர் அரங்க ஏற்பாடுகளையும் விழா ஒருங்கிணைப்பையும் மேற்கொண்டிருந்தனர். கழகப் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் நிகழ்வைத் தொகுத்து வழங்க, கழக உறுப்பினர் திருமதி. ஷேமங்கரி துலாஞ்சனனின் நன்றியுரையைத் தொடர்ந்து,

மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவர் திருமுறை ஓதியதும் கழகப்பண் இசைக்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.  விழாவில் கலந்துகொண்ட அன்பர் அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டது.  இவ்விழாவிற்கு ஊர்வலத்திற்குரிய இணைத்தலைமையினை சைவத்திரு.சரவணமுத்து கார்த்திகைக்குமரனாரும் திரு.சி.தில்லை நடராசனாரும், அரங்க இணைத்தலைமையினை விடைக்கொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலனாரும்,சைவத்திரு.கனக.இரகுநாதனாரும் சிறப்புற மேற்கொண்டிருந்தனர்.  மரு.சிவத்திரு.ஈசான தேசிகர்,சிவஞானச்செல்வர்,கி.பிரதாபனார் விழாத்தலைமையினை முன்னெடுத்திருத்தார். பட்டத்து யானையினைக் கொண்டு சேக்கிழாரினையும் பெரியபுராணத்தினையும் கொண்டாடிய வரலாற்றுச் செய்திக்குப் பிறகு, யானைமேல் சமயநூல்களினை ஏற்றி நகர்வலம் வந்த செய்திகள் பல உண்டு.          எனினும், யானைமேல் ஒருவர் தனியே ஏறியிருந்து தமது இரண்டு கைகளாலும் பன்னிருதிருமுறைகளினையும் பதினான்கு மெய்கண்டசாத்திரங்களினையும் தனது தலையிற் சுமந்தவாறு வந்தது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.  இதன்வாயிலாகவும் இவ்விழா வாயிலாகவும் , ” திருமுறைகளினையும் மெய்கண்ட சாத்திரங்களினையும்” தமிழர் தம் தலையில் வைத்துப்போற்றவேண்டும் என்னும் செய்தியினையும், சைவசமயம் என்னுஞ் சொற்பதத்தினை மீண்டும் செவ்வனே போற்ற வேண்டும் என்னும் உணர்வினையும் இலங்கை சைவநெறிக் கழகம் தமிழ் உலகிற் பதிவுசெய்துள்ளது.


 

comments

Similar Posts

  • |

    தென்னிலங்கை தெனியாயவில் சைவ மாநாடு

    மாத்தறை மாவட்டத்தில் தெனியாயப் பகுதியில் 27- 10 – 2018ஆம் நாள் சைவ முன்னேற்ற மாநாடு வெகுசிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.  தெனியாய சைவ முன்னேற்றக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் இலங்கை சைவநெறிக் கழகத்தாரும் கலந்து சிறப்பித்தனர். தெனியாய சைவ முன்னேற்றக் கழகமானது இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்களின் வழிகாட்டுதலில் தெனியாயவில் தொடங்கப்பட்டுள்ள சைவசமய அமைப்பாகும்.  தெனியாயப் பிரதேசமானது கொட்டப்பொல பிரதேச செயலகப் பிரிவுக்குள் அமைந்துள்ள முதன்மை நகரமாகும். கொட்டப்பொல பிரதேச செயலகப் பிரிவில்…

  • |

    கொரணைப் பிரதேசத் தமிழ் மக்களுக்கு ஆகம ஆலோசனை வழங்கல்

    கொரணை புரோசேஸ்டர் கோவின்ன தோட்டம் முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு(14-04-2018) ஆகமசார் ஆலோசனைகளை வழங்குவதற்கு கொழும்பிலிருந்து சிவாச்சாரியார் சகிதம் சென்று, அவ்வூர் மக்களின் ஆலயபரிபாலனம் தொடர்பான ஆகம ஐயங்களை நீக்கி இலங்கை சைவநெறிக் கழகத்தாற் வழிகாட்டப்பட்டது. comments

  • | |

    சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப் பணி -2013

    05 – 08 – 2013ஆம் நாளன்று  மாவிட்டபுரம் திருக்கோயில் தேர்த்திருவிழாவில் துண்டுப்பிரசுர விநியோகப்பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறைப் பிரதேசத்திலுள்ள திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமித் திருக்கோயிலின் ஆடி அமாவாசைப் பெருவிழாவின்போது (06-08-2013) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.   தொடர்ந்து கொழும்பு பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில்ககள் என்பவற்றில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நல்லூர் திருக்கோயில் முதலிய பல்வேறு சைவாலயங்களில் துண்டுப்பிரசுரம் கொடுக்கும் திருப்பணி முன்னெடுக்கப்பட்டது. சைவசமய மக்களுக்கு சைவசமயம் குறித்த தெளிவினை உருவாக்கும் வகையில்…

  • | |

    இலங்கை கண்ட “முதலாவது” சைவம் போற்றுதும் 2018

    இலங்கையிற் பண்பாட்டையும் தத்துவத்தையும் கலையுடன் இணைத்து சைவம் வளர்க்கும் நிகழ்வுகள் அரிதென்ற நிதர்சனத்தினை உய்த்துணர்ந்த, இலங்கை சைவநெறிக் கழகத்தார் “சைவம் போற்றுதும்- 2018” என்கின்ற விழாவினை முதன்முதலில் 07ம் நாள் ஏப்பிரல் மாதம் 2018 அன்று, சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அரங்கேற்றினர்.  இவ்விழாவிற்கு முதன்மை அனுசரணையை வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாளிகையினரும், துணை அனுசரணையை சைவநெறித் தொண்டர் கழகம்-கனடா, சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை -டென்மார்க்,லிட்டில் ஏசியா எம்போரிய ஆடையகத்தினர் வழங்கியிருந்தனர்….

  • | |

    நாவலப்பிட்டி குயிஸ்பேரித் தோட்டத்தில் சமயதீக்கையும் சிவவழிபாட்டுப் பயிற்சியும்

    மலையகத்தில் நாவலப்பிட்டி குயிஸ்பேரித் தோட்டத்தில்  நவநாதச்சித்தர் பெருமானின் சமாதி விளங்கும் சிவாலயத்தில், 29ம் திகதி ஜூலை மாதம் 2023 நாளன்று காலை 8.00 மணியில் இருந்து மாலை 4.30 மணிவரை 415 பேருக்கு சைவசமயதீக்கை வழங்கும் சிவப்பணி இனிதே நடைபெற்றது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில், இலங்கை சைவநெறிக் கழகத்தின் நெறிப்படுத்தலில், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை இந்து மாமன்றம், சைவ முன்னேற்றச் சங்கம்- பிரித்தானியா, ஆத்மஜோதி முத்தையாசுவாமிகள் சைவசமயத் தொண்டர் சபை, கனடா சைவநெறித் தொண்டர் கழகம்,இலங்கை சைவநெறித் தொண்டர் கழகம் என்பவற்றின் இணை அனுசரணையோடு, சமயதீக்கை வழங்கும் சிவப்பணி நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் சிவாகமபீடத்தின் சிவாச்சாரியப்பெருமகனார், சிவஸ்ரீ. கிருஷ்ண ஜனேந்திர சிவாச்சாரியார் தலைமையில் சிவஸ்ரீ ந.வர்ணதேவக்குருக்கள் (அச்சுவேலி- யாழ்ப்பாணம்), சிவஸ்ரீ.நா.சிவதர்ஷக்குருக்கள் (நல்லூர்- யாழ்ப்பாணம்), சிவஸ்ரீ.கிருஷ்ண ஹரிகரன் ஐயர் (சிவாகம பீடம்- நல்லூர்) ஆகியோர் கலந்துகொண்டு கலந்துகொண்டு சமயதீக்கை கிரியைகளினை சிறப்புற சிவாகமவிதிப்படி நிகழ்த்தியருளினர். சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு சைவசமய அனுட்டானப்புத்தகமும் பஞ்சபாத்திரம்…

  • | |

    நவராத்திரி 2019 சிறப்பு நிகழ்வுகள்

    தேசிய கல்வி நிறுவனத்தின் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் சிவத்திரு.ஈசான தேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள், சைவசமயத்தில் நவராத்திரியின் விளக்கமும் வழிபாட்டு முறைகளும் சைவசித்தாந்த மரபில் சத்தி வழிபாட்டின் நெறிமுறையும் குறித்து சிறப்புரை வழங்கியிருந்தார். சிவத்திற்குப் பேதமாகச் சத்தி வழிபாடு கொள்ளுவது சிவாகமவிரோதம் என்றும், அவ்வாறான பூசை வழிபாடுகள் எல்லாம் பெருத்துவருவது சைவசமயப் பண்பாட்டிற்கு உகந்ததில்லையென்றும், சக்தி பின்னமிலான் எங்கள் பிரான் என்னும் மரபில் கற்போடு நின்று வழிபடும் வழிபாட்டிற்கே…