அம்பாறை வளத்தாப்பிட்டியில் சமயதீக்கை வழங்குதல்

2022 – 03 – 17ஆம் திகதி அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் உள்ள அருள்மிகு மாணிக்கப்பிள்ளையார் திருக்கோயிலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடன் இணைந்து இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தின் பங்களிப்புடன் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சைவசமயதீக்கை வழங்கும் கிரியைகளினைச் சிவாகமவிதிப்படிச் சிறப்புடனே ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்நிகழ்வில் 124 பேர் சைவசமயதீக்கை பெற்றுக்கொண்டனர். சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இல்லங்களில் சிவபூசை செய்வது எவ்வாறென்று விளங்கிய அச்சுப்பிரதி நூல்களும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நாவலர் பெருமான் எழுதிய நித்திய கரும விதி நூலும் வழங்கப்பட்டன.

இலங்கை சைவநெறிக் கழகத் தலைவரும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபைப் பொதுச்செயலாளருமான மரு.சிவத்திரு.கி.பிரதாபன் ஈசான தேசிகர் சைவ அனுட்டானத்தினையும் இல்லங்களில் எளிமையாகச்செய்யக்கூடிய அன்புமார்க்க சிவபூசையினையும் தீக்கை பெற்றுக்கொண்டோருக்கு செய்துகாட்டிப் பயிற்றுவித்தார்.

கல்முனை சிவநெறி அறப்பணி மன்றத்தின் தலைவர் சிவத்திரு.யோ.கஜேந்திரா அவர்கள் கலந்துகொண்டு சமயதீக்கையின் அவசியத்தினை மக்களுக்கு எடுத்து விளக்கி உரையாற்றினார். இந்துசமய கலாசார அலுவல்கள் திணைகளத்தின் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.குமாரசுவாமி ஜெயராஜ் அவர்கள் சிறப்பாகப் பணியாற்றி சமயதீக்கை நிகழ்வினைத் திறம்பட ஒழுங்கமைத்திருந்தார்.

கலந்துகொண்ட மக்கள் அனைவருக்கும் பஞ்சபாத்திரமும் உத்தரணியும் சிவலிங்கமும் சிறுதட்டமும் இல்லங்களில் சைவ அனுட்டானஞ் செய்தல் பொருட்டும், அன்புமார்க்கச் சிவபூசை செய்தல் பொருட்டும் வழங்கப்பட்டது. மாகேசுவரபூசையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

comments