நாவலர் காலமாற்றத்தை உள்வாங்காதவரா? கம்பவாரிதியாரின் கட்டுரைக்கு மறுப்பு

வீரகேசரியில் இடைக்கண் முறிந்தார் பலர் என்னும் தலைப்பில் கம்பவாரிதியவர்களின் கேரள டயரிகுறித்த விமர்சனக்கட்டுரை வெளியாகியிருந்தது. அக்கட்டுரையில் நாவலர் பெருமான் காலமாற்றத்தை உள்வாங்கவில்லை என்று குறைபட்டிருந்ததோடு, நாவலர்பெருமான் சாதிப்பாகுபாட்டினைத் திணித்தார் என்பதுபோல் பொருள்கொள்ளுமாறு தம்கருத்துக்களைப் பதிவுசெய்திருந்தார். இதற்குரிய மறுப்பினை கழகத் தலைவர் சைவத்திரு.மரு.கி.பிரதாபன் அவர்கள் எழுதி வீரகேசரிப் பத்திரிக்கைக்கு வழங்கினார். வீரகேசரிப் பத்திரிக்கை நிர்வாகமும் மறுப்புக்கட்டுரையின் அவசியத்தை உணர்ந்து தமது 05-11-2007 ஞாயிறு பதிப்பில் வெளியிட்டு உதவினர்.

 

சைவவினாவிடை என்பது எந்தவொரு விளக்கவுரைகளும் வழங்காது கேள்வி விடையாக தொகுக்கப்பட்ட ஆகமக் கருத்துக்களாகும். அதில் நாவலர் தனது சொந்தக் கருத்துக்களை எழுதவில்லை.  சைவவினாவிடையில் பயன்படுத்திய சாதி என்கின்ற பதத்திற்குரிய விளக்கத்தை ஆகமங்களின் சாறாகப் பெற்ற தெளிவுகொண்டு பெரியபுராண வசனத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். சாதிகள் பிறப்பால் வருவதல்ல;மாறாக சிவவழிபாட்டின் அன்புடமைத் திறத்தால் வருவது என்பதை நாவலர் ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வகையில்; நாவலர் சாதிகளை ஐந்தாக வகுக்கின்றார்.

நாவலர் வகுத்த சாதிகள்

உலகத்துச் சாதிபேதம் போலச் சற்சமயமாகிய சைவசமயத்தினும் முதற்சாதி இரண்டாஞ்சாதிமூன்றாஞ்சாதி நாலாஞ்சாதி நீச சாதியென சமயநடைபற்றி ஐந்து சாதி கொள்ளப்படும்.

சிவாகமத்தில்
 விதிக்கப்பட்ட நான்கு பாதமுறைப்படி வழுவற நடந்து சிவானந்தப் பெரும்பேறுபெற்ற சீவன்முத்தர் சிவமேயாவர்இனிச் சிவஞானிகள் முதற்சாதிசிவயோகிகள்
இரண்டாஞ்சாதிசிவக்கிரியாவான்கள் மூன்றாஞ்சாதி;சிவாச்சாரியான்கள் நாலாஞ்சாதி;

இந்நெறிகளில் வராதவர்களும் ,இவர்களையும் இவர்கள் சாத்திரமுதலியவற்றையும்
நிந்திப்பவர்களும்,இந்நெறிகளிலே முறைபிறழ்ந்து நடக்கின்றவர்களும்இந்த நடைகளை
விட்ட பதிதர்களும்சதாசூதகிகளாகிய பஞ்சமசாதி.

சிவசரியை கிரியை முதலியவைகளிலே பொருள்தேடி உடம்பை வளர்ப்பவர்களும்,
அப்பொருளை பாசத்தாருக்குக் கொடுத்து இன்புறுபவர்களும்,
கோயிலதிகாரிகளாய்த் தேவத்திரவியத்தைப் புசிப்பவர்களும்விருத்திப் பொருட்டு
ஆசாரியாபிஷேக முதலியன செய்துடையோர்களும்விருத்திப் பொருட்டு
சிவவேடந்தரித்தவர்களும்விருத்திப் பொருட்டுத் துறவறம் பூண்டவர்களும்,
சிவஞானநூல்களைச் சொல்லிப் பொருள் வாங்கி வயிறு வளர்ப்பவர்களும்,
பிறரும் பதிதர்களுள் அடங்குவர்கள்.

இங்கே சொல்லிய முறையன்றிசிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டுத் தமக்குத் திருமேனியாகக் கொண்டருளிய குருலிங்கசங்கமமென்னும் மூன்றிடத்தும்
ஆசையும் பணியும் வழிபாடும் கொடையும் அடிமைத் திறமும் உரிமையுடையவர்கள்
எந்தக் கருமஞ்செய்தாலும் முதற்சாதியெனக்
கொள்ளப்படுவார்கள்
.”

ஆக; நாவலரின் கூற்றுப்படி இழிசாதியினர் என்போர் சிவபெருமானுக்குச் செய்யும் சரியை,கிரியைகளில் பொருள்,பணம் தேடி உடம்பை வளர்ப்போர்,கோயில் தர்மகர்த்தாக்களாகவிருந்து ஆலய வருமானங்களையும் ஆலயச் சொத்துக்களையும் கொள்ளையடிப்பவர்கள்,பணம் உழைக்கும் ஆசையிலும் மரியாதையைப் பெறும்நோக்கிலும் ஆச்சாரிய அபிடேகம் செய்துகொள்ளும் குருமார்கள், விருத்திப்பொருட்டு சிவனடியார்போல் நடிப்பவர்கள்,விருத்திப்பொருட்டு துறவறம் பூண்டவர்கள், சிவஞான நூல்களைச் சொற்பொழிவு செய்கிறோம் என்றபெயரில்ப் பொருள்;பணம் தேடி வயிறுவளர்பவர்கள்,சிவநிந்தனை;சிவத்துரோகம் செய்பவர்கள் ஆகியோராவர்.  இன்றைய சைவசமய உலகில் சிவாச்சாரியார்கள்,ஆலய தர்மகர்த்தாக்கள்,சமய சொற்பொழிவாளர், சைவ வேடந்தாங்கியோர் என்று பெரும்பாலான அனைவரும் நாவலரின் கூற்றுப்படி இழிசாதியினரேயாம். இதனால்த்தான்; நாவலர் கூறிய இக்கருத்துக்களை அத்தனைபேரும் இருட்டடிப்புச் செய்துவருகின்றனர். அதில் கம்பவாரிதியவர்களும் இணைந்துகொண்டது வருத்தத்துக்குரியதேயாம்!

comments