கொழும்பு விவேகானந்த சபையில் சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளின்பொருட்டு (27-01-2019) ஏற்பாடு செய்யப்பட்ட விவேகானந்தர் விழாவில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். "ஞானத்தினை நோக்கி நகர்ந்த சுவாமி விவேகானந்தர் கண்ட சைவசித்தாந்த தரிசனம்" என்னும் தலைப்பிற் கழகத்தின் தலைவர் அவர்கள் சொற்பொழிவாற்றினார்.
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சொற்பொழிவாற்றிச் சாதித்ததற்குக் காரணம், அமெரிக்காவினர் ஆபிரகாமிய மதங்களைத் தவிர வேறொன்றினையும் அறிந்திராமையேயாகும். சுவாமி விவேகானந்தர் அமெரிக்காச் சொற்பொழிவுகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியபோது, முதலில் வந்தது இலங்கைக்கேயாகும். இலங்கையில் சைவசமயம் குறித்த அடிப்படையை அறிந்து கொண்டு ஏற்பட்ட புரிந்துணர்வால், இந்துவென்னும் சொற்பதத்தில் பொருள் இல்லையென்றும், சைவம் என்றும் வேதாந்தம் என்றுமே இந்திய சமயங்கள் அறியப்படவேண்டும் என்றும் யாழ்ப்பாணத்தில் சொற்பொழிவாற்றினார். இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு, தமது அமெரிக்காப் பயணத்திற்கு நிதிக்கொடையளித்த இராமநாதபுர மன்னருக்கு நன்றி தெரிவிக்க, இராமநாதபுரம் சென்றார். அங்கு, இராமநாதபுர மன்னர் முன்னிலையில் மன்னரின் சைவசமய ஆலோசகரான சூளை சோமசுந்தர நாயகருடன் சங்கராத்வைதத்திற்கும் சைவசமயத்திற்குமான தத்துவ விவாதம் நடத்தும்படி இராமநாதபுர சேதுபதி மன்னர் வேண்டிக்கொள்கின்றனர். மன்னரின் வேண்டுதலுக்கு அமைவாக, சுவாமி விவேகானந்தர் சூளை சோமசுந்தர நாயகருடன் விவாதிக்கின்றார். அப்போது, சிவாகமங்களில் இருந்து சான்று காட்டாது வேதங்களில் இருந்தே காட்டவேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் வலியுறுத்துகின்றார். அப்போது, வேதத்தில் கூறப்படும் பிரமம் என்பதன் பொருள் என்னவென்று சூளை சோமசுந்தர நாயகர் வினாவினார். அதற்கு, சுவாமி விவாகனந்தர் பிரமம் என்றால் பெரியதென்று கூறினார். பெரியதென்று ஒன்று உண்டென்றால், அது சிறியதென்ற இன்னொன்றின் இருப்பை ஏற்பதாகவே அமையும். ஏனெனில் ஒரேயொரு பொரு மட்டுமே உள்ளதென்றால், பெரியது சிறியதென்ற கருத்தே எழாது. ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உள்ளபோதே, ஒன்று பெரியது மற்றையது சிறியதென்ற பேதங்கள் எழும். எனவே பேரறிவுடைய பிரமமும் சிற்றறிவுடைய உயிர்களும் உள்ளதென்பது பிரமம் என்னும் சொல்லாட்சியாலேயே உறுதியாகின்றதென்று சூளை சோமசுந்தர நாயகர் சாதித்தார். ஏனெனில், சுவாமி விவேகானந்தர் பின்பற்றிய மதம் சங்கராத்வைத மதம். இம்மதக் கொள்கைப்படி, உயிர்களென்றோ உலகங்கள் என்றோ எதுவும் இல்லை; பிரமமே உயிர்களாகவும் உலகாகவும் தோற்றப்போலிகளாய்க் காட்சியளிக்கின்றதென்பதாம்.
வேதாந்தம் என்பது சைவசமயத்தைப் பொறுத்தவரை உபநிடதங்களையோழிய, அந்த உபநிடதங்களுக்குப் பிழையான பொருளைக் கற்பித்து எழுந்த சங்கராத்வைத மதம் முதலியவற்றையன்று. இவ்வுண்மையை உணராதோர், வேதாந்த சித்தாந்தம் வேறில்லை என்பதற்கு சங்கராத்வைதமும் சைவசித்தாந்தமும் வேறில்லையென்று தவறாக உரைசெய்வர். தாயுமானசுவாமிகள் சங்கராத்வைதம் முதலியவற்றை பொய்நெறிகளென்றும், மெய்கண்டார் பெற்ற சிவஞானமாகிய சைவசித்தாந்தமே மெய்நெறியென்றும் சாதித்தருள்கின்றார். சூளை சோமசுந்தர நாயகப்பெருமான் பிரமம் என்னும் சொல்லாட்சியைக் கொண்டே, சுவாமி விவேகானந்தரை வாதில் வென்றதோடு, பிரமத்தை உலகாகவும் உலகப்பொருட்களாகவும் உயிர்களாகவும் தோற்றப்போலியாக்கியிருப்பதே மாயையெனின், பிரமத்தைத் தாக்கி இப்படி உழலச்செய்யும் மாயை பிரமத்தைக் காட்டிலும் வலுவானதாகின்றதென்பதால், பிரமம் எப்படிப் பூரணத்துவம் உடையதாகும்? முதலிய பல்வேறு கேள்விகளைக் கேட்டு சுவாமி விவேகானந்தருக்கு சங்கராத்வைதத்தின் குறைகளை உணர்த்தினார். இதனால் ஏற்பட்ட ஞானத்தாகத்தினால், சைவத்திரு.ஜே.எம்.நல்லுச்சாமிபிள்ளையவர்களை நாடி, சைவசித்தாந்தத்தை ஆங்கிலத்தில் கற்கத் தொடங்கினார். இச்சைவசித்தாந்தத்தைத் தாம் முதலிலேயே அறியாமல்விட்டது தம் தவக்குறைவென்று வருந்தினார். இவ்வரலாறுகள் இக்காலத்தில் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளபோதும், இலங்கை கொழும்பு விவேகானந்த சபை சைவசித்தாந்த நெறியில் நிற்கும் சபையாக விளங்குவது சுவாமி விவேகானந்தரின் ஞானத்தேடலைப் போற்றும் மரபுக்குரியதாகும் என்று சபையோருக்கு தமதுரையில் கழகத் தலைவர் நன்றே விளக்கினார்.
இலங்கை சைவநெறிக் கழகத் தலைவரின் உரையைத் தொடர்ந்து நன்றி பாராட்டி கொழும்பு விவேகானந்த சபைத் தலைவர் உரையாற்றும்போது, கொழும்பு விவேகானந்த சபையானது தொடங்கப்படும்போது சைவ சபையாகவே கூட்டப்பட்டதென்றும், அக்கூட்டத்திற்கு சில நாள்களுக்கு முன்னரே சுவாமி விவேகானந்தர் இறையடி எய்தியமையினால், அவருடைய பெயரை அவருக்குச் சிறப்புச் செய்யும் வகையில் சூட்டிக்கொண்டு தொடங்கப்பட்டதென்றும், அங்ஙனம் தொடங்கினபோதும் சைவசித்தாந்த மரபில் இயங்கும் சபையாகவே சபை உருவாக்கப்பட்டதென்றும், தொடங்கப்பட்ட காலந்தொட்டு சைவசித்தாந்த சபையாகவே இயங்கி வருவதும், சைவசமய மறுமலர்ச்சிக்குரிய பல்வேறு நூல்களைப் படைத்துப் பரப்பிவரும் வரலாற்றுடையதாகவும் சைவபோதினி என்னும் பெயரில் சைவப் பாடத்திட்ட நூல்களை வெளியிட்ட சிறப்புடையதாகவும் விளங்கும் சபையென்று விளக்கினார். கொழும்பு விவேகானந்த சபை சைவசமய சபையாகவே எக்காலமும் விளங்கும் என்றும், அதற்கு எந்தவொரு கேடும் வராது தமிழர் போற்றவேண்டும் என்றும் விண்ணப்பித்துக் கொண்டார்.