சைவநெறி என்னும் இலங்கைப் பாடத்திட்டப் பெயரை ஒழிக்கலாமோ?

இலங்கைப் பாடத்திட்டத்தில் சைவநெறி என்று இருக்கும் சைவசமயப் பாடத்திட்ட நூலின் பெயரை இந்துசமயம் என்று மாற்றவேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கல்விக்குழுத் தலைவராக இருக்கும் திரு.த.மனோகரன் என்பார் கட்டுரை எழுதித் தினக்குரலில் வெளியிட்டார். சுமார்த்தமத இந்துத்துவத் தரகர்களுடன் இணைந்து இயங்குவதினாலும் சைவசமயத்திற்கும் சுமார்த்தமதத்திற்கும் உரிய வேறுபாடுகளை உரியமுறையிற் தெளிந்துகொள்ளாமையினாலும், சைவசமயம் / சைவநெறி என்னும் சொற்பதங்களின்பால் காழ்ப்புணர்வுடன் இயங்கும் இந்நபர், பல்வேறு கருத்துக்களையும் திரித்து; போலிக்கருத்துக்களையெல்லாம் இட்டுக்கட்டி குறித்த கட்டுரையை எழுதியிருந்தார். அப்போது இலங்கை சைவநெறிக் கழகத்தின் ( சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின்) பொதுச்செயலாளர் சைவத்திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் குறித்த கட்டுரையைக் கண்டித்தும் நிராகரித்தும் உண்மைகளைச் சைவப்பெருமக்கள் தெளிந்து சைவசமயம் என்று உணர்ந்து உயரவேண்டும் என்னும் நோக்கில் மறுப்புக் கட்டுரையைத் தினக்குரல் பத்திரிக்கைக்கு 17 – 02 – 2017ஆம் நாள் திகதியிட்டு எழுதி வழங்கினார். தினக்குரல் பத்திரிக்கை நிர்வாகம் திரு.வி.துலாஞ்சனன் அவர்களின் கட்டுரையின் பெறுமதியை உணர்ந்து தமது ஞாயிறு பதிப்பில் (19-02- 2017) உடனடியாக வெளியிட்டு உதவினர். இலங்கையில் சைவசமயம் என்னுஞ் சொற்பதத்தினை ஒழிக்கும் செயற்திட்டத்தினைக் கண்டும் காணாது பாரம்பரிய அமைப்புக்கள் எல்லாம் விளங்கும்போதும், இலங்கை சைவநெறிக் கழகம் (சைவ சமூகத் திருப்பணிக் கழகம்) இவ்விசயத்தில் ஒருபோதும் சமரசம் இன்றிப் பணியாற்றும் பாங்கினை விடைக்கொடிச்செல்வர் சைவத்திரு.சின்னத்துரை தனபாலா பெருமகனார் தனிப்பட்டரீதியிலும் அகில இலங்கை இந்து மாமன்றப் பேரவைக் கூட்டத்திலும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

comments