இடபக் கொடிக்கு ஏற்பட இருந்த இடரைத் தடுக்கும் பணியில் கழகம்!!!

இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் கொழும்புக்கிளையினால் ''ஸ்ரீ குருபூஜா விழா'' என்னும் பெயரில் 11-08 – 2013 நாளன்று விழாவொன்று,  விவேகானந்த சபை மண்டபத்தில்  விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டுக் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தத.  இவ்விழாவில், இலங்கையில் சைவசமயத்தினரின் அடையாளமாக விளங்கும் சமயக்கொடியாகிய இடபக்கொடிக்குப் பதிலாக, தனித்த காவிக்கொடியினையே சைவசமயத்தாரும் ஏற்றொழுகுதல் வேண்டும் என்னும் செயற்திட்டத்தினை திணிக்கும் வகையில் ''காவிக்கொடி'' அறிமுகஞ் செய்துவைத்து இலங்கையின் இந்துக்கொடியாக காவிக்கொடியினை பிரகடனஞ் செய்துவைக்கும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது.

இடபக்கொடியினை அறிமுகஞ்செய்துவைத்து தமது சொந்த செலவில் அச்சடித்து இலவசமாக உலகளாவியரீதியில்  விநியோகஞ்  செய்யும் சிவப்பணியினை முன்னெடுத்து, தமிழரிடம் சைவசமயக்கொடியாக இடபக்கொடியினை செவ்வனே பரப்பி நிலைநாட்டிய பெருந்தகை விடைக்கொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலனார் பெருமகனார்.  இவருடைய இப்பணியினை அக்காலத்தில் இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சின் அமைச்சராகப் பணியாற்றிய அமரர்.தி.மகேஸ்வரன் அவர்கள் ஏற்றுக்கொண்டு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அச்சடித்து இலவசமாக நாடளாவியரீதியில் விநியோகிக்கும் பணியினை நடைமுறைப்படுத்தினார்.  பல்வேறு சைவ மாநாடுகளில் தமிழ்நாட்டு ஆதீனங்களினைக் கொண்டுவித்து இடபக்கொடியினை அறிமுகப்படுத்தி, பல்வேறு நாடுகளிலும் உள்ள கோயில்களுக்கு இலவசமாக விநியோகித்து சைவத்தமிழ்ப் பெருமக்களை இடபக்கொடியினால் ஒன்றிணைத்த பெருந்தகை திரு.சின்னத்துரை தனபாலனார் பெருமகனார். இவருடைய இப்பணியினைப் பாராட்டி பேரூர் வீரசைவ ஆதீனத்தார் ''விடைக்கொடிச்செல்வர்'' என்னும் பட்டத்தினை இப்பெருமகனாருக்கு வழங்கியும் இருந்தனர்.
 

இடபக்கொடி என்பது சிவபெருமான் ஏந்தியிருக்கும் கொடி. காவிக்கொடிக்கு எந்தவொரு சமயநூல் அங்கீகாரமும் இல்லை.  இடபக்கொடி தமிழரின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்த கொடி. இவ்வுண்மைகளினை தமிழரிடையெ இல்லாதொழித்து சைவசமயத்தின் தனித்துவத்தினை இந்துமதம் என்னும் பெயரினால் ஒழித்துவிடும் நோக்கோடு காவிக்கொடியினை அறிமுகஞ்செய்து பரப்ப முயற்சி செய்கின்றனர் என்னும் விளக்கத்தினை சைவத்தமிழ்ப் பெருமக்களிடம் கொண்டுசெல்லவேண்டும் என்று விடைக்கொடிச்செல்வர் பெரும் முயற்சி செய்யத்தொடங்கினார். சிவபெருமானே ஏந்தியிருக்கும் இடபக்கொடியினை மனிதரின் கற்பனையில் உருவாகிய காவிக்கொடி கொண்டு ஒழிக்கும் செயற்பாடு சிவபாதகம் என்பதினை விளக்கி, பல்வேறு அமைப்புக்களுக்கும் கடிதம் எழுதினார்.  கொழும்பு விவேகானந்த சபை சைவசித்தாந்த மரபில் விவேகானந்தரினைக் கொண்டாடும்  வழக்குடையது.  எனவே, கொழும்பு விவேகானந்த சபை இடபக்கொடியினையே சைவசமயத்தார் பயன்படுத்துதல் வேண்டும் என்றும்,  இடபக்கொடிக்கு மாற்றீடாக இலங்கையில் வேறொரு கொடி அவசியமற்றது என்றும் இலங்கையில் இந்துவென்ற பெயரினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது சைவசமய மக்களே என்பதினையும் சுவாமி விவேகானந்தர் இலங்கையில் ''சைவசமயம் என்பதே சாலப்பொருத்தமானது '' என்று ஏற்றுப்பேசியுள்ளார் என்பதினையும் வலியுறுத்தி ஏற்பாட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தனர்.   பல்வேறு அமைப்புக்களும்   தனிப்பட்டரீதில் இவ்வுண்மைகளினை விளக்கி, விடைக்கொடிச்செல்வர் கடிதம் எழுதினார். இவற்றினால் கொழும்பு இந்து ஸ்வயம்சேவா சங்கத்தின் பகிரங்கமான காவிக்கொடி திணிப்புச் செயற்பாடு கைவிடப்பட்டது.

எனினும் சுமார்த்தமத இந்துத்துவ அமைப்புக்கள் எங்ஙனமேனும் காவிக்கொடியினை சைவமக்களிடம் புகுத்தி இடபக்கொடிப்பாவனையினை ஒழிக்கவேண்டும் என்று முயற்சி செய்து, காவிக்கொடி சார்ந்த பிரச்சாரங்களினை முன்னெடுக்கத் தொடங்கினர்.  அச்சமயம், தமிழரின் சைவப்பண்பாட்டின் அடையாளம் இடபக்கொடியே என்பதினை சைவத்தமிழ்ப் பெருமக்களிடம் உணர்த்தும்வகையில் இலங்கை சைவநெறிக் கழகத்தினால்(சைவசமூகத் திருப்பணிக் கழகத்தால்) பத்திரிக்கைகளுக்கு அறிக்கைகள் வழங்கப்பட்டன. 01- 09 - 2013ம் திகதி வீரகேசரிப் பத்திரிக்கையிலும் 05 - 09 - 2013ம் திகதி தினக்குரல் பத்திரிக்கையிலும் ‘’இடபக்கொடியே சைவசமயத்தாரின் கொடி’’ என்பதினை உணர்த்தும் வகையில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் ( சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின்) விழிப்புணர்வு அறிக்கைகள் வெளிவந்தன.

.